நெல்லை மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வண்ணார்பேட்டை. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் தனது குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். குறிப்பாக வண்ணார்பேட்டை வெற்றி வேலடி விநாயகர் கோவில் அருகே உள்ள மாநகராட்சி அங்கான்வாடி பள்ளியில் சேர்த்து தங்களது பிள்ளைகளின் தொடக்க கால பள்ளி படிப்பை ஆரம்பித்தனர் பெற்றோர்கள். இதனால் ஆரம்ப காலத்தில் அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டு வந்தது. பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அருகிலேயே பாதுகாப்புடன் படிக்க அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது கடந்த சில காலங்களாக அந்த பள்ளி ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுவதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. குறிப்பாக தற்போது 35 குழந்தைகள் வரை முன்பருவ கல்வியை படித்து வருகின்றனர்.
தங்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே இருக்கும் பள்ளியில் பிள்ளைகளை அனுப்ப முடியாத அளவில் சிதலமடைந்து கொண்டு செல்லும் பள்ளியின் நிலையை கண்ட அப்பகுதி இளைஞர்கள் தங்களின் சொந்த முன்னெடுப்பில் பள்ளியின் தரத்தை உயர்த்தும் அளவிற்கு சீரமைக்க வேண்டுமென முடிவெடுத்தனர். அதன்படி இளைஞர்கள் தங்களுக்குள் நிதி திரட்டி கட்டிடத்தை பராமரித்து குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுக்க முடிவு செய்தனர். மேலும் இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழா வருவதையொட்டி இந்த பணியை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அங்கன்வாடி கட்டிடத்தை புனரமைத்து வருவதோடு சிதலமடைந்த இடங்கள் புதுப்பிக்கப்பட்டு வகுப்பறை, மதில் சுவர், கரும்பலகை உள்ளிட்டவைகள் வண்ணம் பூசி புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவற்றில் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுதந்திர போராட்ட வீரர்கள், தலைவர்கள் ஓவியங்கள், விலங்குகள், மலர்கள், பழம், காய் போன்ற ஓவியங்கள் கார்டூன் சித்திரங்கள் ஆகிய ஓவியங்கள் இளைஞர்களின் முயற்சியால் வரையப்பட்டுள்ளது. மேலும் அந்த பள்ளியில் உள்ள தோட்டம், குடிநீர் தொட்டிகள் ஆகியவை பராமரிக்கப்பட்டு புதிய பொலிவு பெற்றுள்ளது. இளைஞர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும்பொழுது, நாங்கள் சிறு வயதில் அனைவரும் ஒன்றாக படித்து வளர்ந்த பள்ளி இது. தற்போது தங்கள் கண்முன்னே சிதலமடைந்து போவதோடு எங்களது சந்ததியினரை அனுப்ப யோசிக்க வேண்டிய சூழலும் உருவாகி உள்ளது. இதனால் இப்பகுதி இளைஞர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை சீரமைக்க முடிவு செய்து பணியை துவங்கி செய்து வருகிறோம். வரும் சுதந்திர தினத்தில் இந்த பள்ளி புதுப்பொலிவுடன் இருக்கும் வகையில் பணிகள் பாதி முடிந்துள்ளது. இதேபோல் இந்த பள்ளியின் அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியும் சிதலமடைந்து காணப்படுகிறது. எங்களுடன் சேர்ந்து அரசும் தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் அந்த பள்ளியையும் மேம்படுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்