தியாகி இம்மானுவேல் சேகரன் நூற்றாண்டு விழா பாளையாங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து  நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும் போது, "முக்கியமான இந்த விழாவை என்னை பொருத்தவரை தமிழக அரசு நடத்தி இருக்க வேண்டும். இனி வரும் காலத்தில் நமக்கும் ஓர் நேரம் வரும். தமிழகத்தில் நாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகு புரட்சியாளர் இமானுவேல் சேகரன் பற்றி நிச்சயமாக மிகப் பெரிய அளவிலே நாம் கொண்டாடுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆனநிலையில்  புரட்சியாளர் இமானுவேல் சேகரனை  ஒரு ஜாதிக்குள் அடக்க எனக்கு விருப்பம் கிடையாது.  55 ஆண்டுகள் ஆட்சி செய்து கொடுக்காத சமூக நீதியை இனி இவர்கள் கொடுக்கப்போகிறார்களா? இதற்கு ஒரே வழி ஆட்சி அதிகாரம். பாட்டாளிகள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கிறார்கள், அவர்கள் முன்னேற வேண்டும் அது தான் சமூக நீதி. தமிழ் நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் சமூக நீதி அடிப்படையில் தான் முன்னேற்றம் அடையும். தேவேந்திர சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக தேவேந்திர குல வேளாளர் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்து இருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை வையுங்கள்.  


மது ஒழிப்பு, மதுவிலக்கு குறித்து ராமதாஸை தவிர்த்து யார் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். வாழுகின்ற தலைவர்களில் இந்தியாவிலே 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்தவர் மருத்துவர் ஐயா ராமதாஸ். அதில் நான்கு இட ஒதுக்கீடு தமிழகத்திற்கு இரண்டு இட ஒதுக்கீடு இந்தியாவிற்கு பெற்று தந்தவர்  மருத்துவர் ராம்தாஸ். இந்தியாவில் வாழுகின்ற தலைவர்களோ அல்லது வாழ்ந்த தலைவர்களோ இதுவரை ஒரு இட ஒதுக்கீடு கூட பெற்று தந்ததாக எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு புரட்சியாளர் மருத்துவர் ராமதாஸ். முதல்வர் பிரதமருக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என கடிதம் எழுதியுள்ளார். சமூக நீதி என்று பேசுகின்ற திமுக அரசு. அதன் அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு சமூகத்தினரும் எந்தசமூக பின் தங்கிய நிலையில் இருக்கிறார். பொருளாதாரத்தில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என கணக்கெடுத்து அதன் அடிப்படையில் யூகங்களை அமைப்பது தான் நல்ல ஒரு அரசு. ஆனால் அந்த பக்கம் நான் போகவே மாட்டேன் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் என்ன தயக்கம். பீகார், கர்நாடகம், ஆந்திரா, ராஜஸ்தான் என அனைத்து இடங்களிலும் நடத்தியுள்ளனர். சமூக நீதிக்கு நாங்கள் தான் சொந்தக்காரர்கள் என சொல்கிற திமுக அரசு இதனை அதிகாரம் இல்லை என அறிவிக்க என்ன காரணம்? சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் 55 ஆண்டுகளாகியும் நான் கெஞ்சிக்கொண்டு தான் இருக்கிறேன். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு கொடுங்கள், தென் மாவட்டங்களை வளர்ச்சியடைய வையுங்கள் என்று. 


புரட்சியாளர் அம்பேத்கரை தாழ்த்தபட்ட சமுதாயத்தின் தலைவர் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டனர். மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்பட வேண்டியவர் அண்ணல் அம்பேத்கர். அவரை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்தது வருத்தம் அளிக்கிறது.  இதெல்லாம் எப்போது மாறும் என்றால் என்று பாட்டாளிகள் ஆட்சிக்கு வருகிறார்களோ அன்றுதான் இதெல்லாம் மாறும். அது நிச்சயமாக விரைவில் இது நடக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த மனமாற்றம் தமிழகம் முழுவதும் நான் பார்த்து வருகிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் தற்போது ஒரு விரக்தியில் இருக்கின்றனர். இந்த சூழலை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.