குமரி மாவட்டம் தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுக முகதுவாரத்தில் படகு கவிழ்ந்து தொடரும் உயிரிழப்புக்கு நடவடிக்கை எடுக்க கோரி துறைமுக அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக வேலை நிறுத்தம் மற்றும் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடந்து வருகிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த துறைமுகத்தில் முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடந்து வருகின்றன. எனவே, துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 



 

 

துறைமுக முகதுவாரத்தில் துறைமுக கட்டுமான குறைபாடுகள் காரணமாக ஏற்படும் மண்திட்டிலிருந்து எழும்பும் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து 27 மீனவர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் உயிர் இழந்த மீனவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் கேட்டும் துறைமுக முகதுவார மண்திட்டுகளை அகற்ற கோரியும் கட்டுமான குறைபாடுகளை சீர்செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தியும், கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்தூர் இனயம் மண்டலங்களை சேர்ந்த துறைமுக அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்று தொடர் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். உடனே பணிகள் துவங்காவிட்டால் போராட்டத்தின் வடிவத்தை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.