பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்திருந்தார. குறிப்பாக தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாகவும் ஊழல் குற்றச்சாட்டுக்காக ஜெயலலிதா சிறைக்கு சென்றது குறித்தும் பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அண்ணாமலை முன்வைத்த விமர்சனம் அதிமுக - பா.ஜ.க இடையிலான பனிப்போரை பகிரங்க மோதலாக மாற்றியிருக்கிறது. அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணாமலை அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவராக இருப்பதாக அ.தி.மு.க மூத்த தலைவர்கள் கொந்தளித்து வருகின்றனர்.


ஏற்கனவே அண்ணாமலை நடவடிக்கை பிடிக்காமல் அதிமுக - பாஜக கூட்டணியிடையே விரிசல் ஏற்படும் சூழல் நிலவியது. தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்த பிறகு  அண்ணாமலை மீது எந்த கோபமும் இல்லை. பாஜக அதிமுக கூட்டணி நீடிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்பிறகு மீண்டும் தற்போது அண்ணாமலையால் அதிமுக பாஜக கூட்டணி பிளவு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. எனவே தமிழகம் முழுவதும் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் அண்ணாமலைக்கு எதிராக மாநகராட்சியின் 28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் மாநகரம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.


அந்த போஸ்டரில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டாதே அம்மா பற்றி பேச உனக்கு தகுதி உண்டா? அண்ணாமலையே நாவை அடக்கு என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோரது பெயர்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் மாநில பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான உறவில் விரிசல் நீடிப்பது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் பாராளுமன்றத் தேர்தல் வரை பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண