வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமேசான் பரிசுப் பொருள் விழுந்துள்ளதாகவும் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பி இரண்டு பேரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ. 3.20 லட்சம் பணத்தை குற்றப்பிரிவு போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.




தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த தங்கபாண்டியன் மகள் ஜோன்ஸ் என்பவருக்கு அவருடைய வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அவருடைய செல்போனுக்கு லிங்குடன் குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து ஜோன்ஸ் தன்னுடைய இன்டர்நெட் பேங்கிங் பயனாளர் பாஸ்வேர்டு மற்றும் ஓடிபி ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ 1,24,500 பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜோன்ஸ் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.




அதேபோன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொருவருக்கு அமேசானில் பரிசு விழுந்துள்ளதாக அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பரிசு பெறுவதற்கு ரூம் 25,000 பணம் செலுத்த வேண்டும் என்று கிரெடிட் கார்டு மூலம் பணத்தை செலுத்த ஒரு லிங்க் அனுப்பி உள்ளார். அந்த லிங்கை கிளிக் செய்து அந்த நபர் தனது கிரெடிட் கார்டு எண்ணையும் ஓடிபி எண்ணையும் கொடுத்துள்ளார். அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 4 லட்சத்து 38 ஆயிரத்து 238 பணம் மோசடியாக எடுக்கப்பட்டது.


அவரும் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். இவ்விரு புகார் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஜோன்ஸ் என்பவர் இழந்த பணம் அவருடைய வங்கி கணக்கு மூலம் பிலிப்கார்ட் இணையதளத்தில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டறியப்பட்டது. பிளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்து பொருட்கள் ரத்து செய்யப்பட்டு 99 ஆயிரத்து 500 பணம் திரும்பப் பெறப்பட்டது. இதேபோல் மற்றொரு வழக்கில் கிரெடிட் கார்டு மூலம் இழந்த பணத்தில் அமேசான் இணையதளத்தில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் ரத்து செய்யப்பட்டு மனுதாரருடைய ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 295 பணம் திரும்ப பெறப்பட்டது. இவ்விரு வழக்குகளிலும் விற்கப்பட்ட பணத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.




இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் கூறும் போது, “எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி மூலமாக முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் வங்கி அலுவலர் போல் பேசி யார் ஓடிபி கேட்டாலும் அதை யாரிடமும் பகிர வேண்டாம். சைபர் குற்ற மோசடியாளர்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்  இதனைத் தொடர்ந்து புகார் குறித்து உடனடியாக விரைந்து நடவடித்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசாரை எஸ்பி பாராட்டினார்.