நாடு முழுவதும் துறைமுக தொழிலாளர்கள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக இந்திய நீர்வழி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் டி.நரேந்திரராவ் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த டி.நரேந்திரராவ், "நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களின் தொழிலாளர்கள் மற்றும் துறைமுகங்களில் செயல்படுகின்ற 5 சம்மேளனங்களை ஒருங்கிணைத்து வரும் ஏப்ரல் மாத கடைசியில் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்நிலையில் தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில் மீண்டும் பல வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். ஏற்கனவே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தான் இந்த நாடு தழுவிய போராட்டத்தை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்திய துறைமுகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 34 ஆயிரம் நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்திய துறைமுகங்களில் அதானி குழுமத்தின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. பல துறைமுகங்கள் அதானி கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கல் திட்டத்தின் கீழ் பெரும் துறைமுகங்களில் உள்ள சரக்கு கையாளும் தளங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் அதானியின் பங்கு அதிகமாக உள்ளது. அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் துறைமுகங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அந்நிய நாடுகளுடனான நமது உறவை பாதிக்கும். எனவே, அதானி குழும பங்கு சரிவுக்கான காரணம் குறித்து ஆராய்ந்து, அதானி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம், 9-வது சரக்கு தளம், 1, 2, 3 மற்றும் 4-வது தளம் போன்றவற்றை ரூ.2,999 கோடிக்கு தனியாரிடம் வழங்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெரும்துறைமுக ஆணைய சட்டத்தால் துறைமுகங்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கேன்டீனில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
துறைமுக தொழிலாளர்களுக்கு 1.1.2022 முதல் புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை பேச்சுவார்த்தை முடிக்கப்படவில்லை. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தான் ஏப்ரல் மாத இறுதியில் பெரிய அளவில் போராட்டத்துக்கு திட்டமிட்டுள்ளோம். 30 ஆயிரம் துறைமுக தொழிலாளர்கள் மற்றும் அதை சார்ந்திருக்கிற தொழிலாளர்கள் என மொத்தம் 1 லட்சம் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள்.
எங்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 18, 19-ல் சென்னையில் நடைபெறுகிறது. அதில் இந்த போராட்ட தேதி குறித்து முடிவு செய்யப்படும். வரும் ஏப்ரல் 5-ம் தேதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் துறைமுக தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளோம்.
சேதுசமுத்திர திட்டத்துக்கு இந்திய துறைமுகங்கள் நிதி பங்கீடு செய்வதற்கு தயாராக உள்ளன. கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் சேதுசமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற பணம் தர தயாராக இருக்கின்றன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல் எளிதில் துறைமுகங்களுக்கு வந்து விடும். இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தனியார் துறைமுகங்களுக்கு நிதி தரமாட்டோம் என்று எதிர்த்தோம். சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது. சேது சமுத்திர திட்டத்தில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை சந்தேகத்தோடு தான் பார்க்க வேண்டி உள்ளது. அதன் பின்னணியிலும் கார்பரேட் நிறுவனங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது" என்றார். பேட்டியின் போது துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன,இந்திய நீர்வழி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன செயலாளர் ரசல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.