கோவில்பட்டியில் குலுக்கல் முறையில் பரிசு விழுந்ததாக கூறி ரூபாய் 14 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 13 செல்போன்கள், 2 லேப்டாப் உட்பட பல்வேறு உபகரணங்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 20,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ராமசுந்தரம் (40) என்பவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோவில்களில் அர்ச்சகராக இருந்து வருவதாகவும், கடந்த 2018ம் ஆண்டு ஆம்னி வேனில் வந்த நபர்கள் மெத்தை, தலையணை, ஃபேன் போன்றவற்றை மேற்படி ராமசுந்தரத்திடம் ரூபாய் 5,000/-க்கு விற்பனை செய்துவிட்டு குலுக்கல் முறையில் பரிசு விழும் என்று கூறி மேற்படி ராமசுந்தரத்தின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் சில நாட்கள் கழித்து ராமசுந்தரத்திடம் இருசக்கர வாகனம் பரிசு விழுந்துள்ளதாகவும் மற்றும் பல காரணங்களை கூறி அவைகளுக்கு முன்பணம், வருமானவரி போன்றவை செலுத்த வேண்டியுள்ளது என கூறி பல வங்கி கணக்குகள் மூலம் சிறிது, சிறிதாக ரூபாய் 14,28,860/- பணம் மோசடி செய்து ஏமாற்றியதாக ராமசுந்தரம் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ராமசுந்தரம் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகரன் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடியில் ஈடுப்பட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் மேற்படி ராமசுந்தரத்தை மோசடி செய்த தூத்துக்குடி கோரம்பள்ளம் சவேரியார்புரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் 1) முத்துகுமார் (37) என்பவரை சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வைத்து கைது செய்து அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடன் மோசடியில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் புல்லலங்கோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் 2) முனிரத்னம் (36) என்பவரை அவரது வீட்டின் முன்பு வைத்தும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் 3) மருதுபாண்டியன் (38) என்பவரை சங்கரன்கோவிலில் வைத்தும் கைது செய்து அவர்களிடமிருந்த 13 செல்போன்கள், 2 லேப்டாப், ஒரு டேப், ஒரு ஹார்டு டிஸ்க், 5 டெபிட் கார்டுகள், 2 டாங்கில் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 20,000/-யும் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IV ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முத்துகுமார் மீது ஏற்கனவே தூத்துக்குடி சைபர்குற்ற பிரிவு காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கில் சம்மந்தப்பட்டு இருந்ததால் அந்த வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு குறித்து சைபர் குற்ற பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை செய்து 3 பேரை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.