நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மதுரை ரயில்வே கோட்டம் ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. 


நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில்,  கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுண் ஆகிய ரயில் நிலையங்களில் 405 மீ நீளம் கொண்ட ஒற்றை நடைமேடையும், பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீ நீளம் கொண்ட இரு நடைமேடைகளும், அம்பையில் 475 மீ கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது. காரைக்குறிச்சியில் 270 மீ கொண்ட ஒற்றை நடைமேடையும் உள்ளது. குறிப்பாக நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில்  பயணிகள் நடைமேடைகளும், 2 சரக்கு லைன்,ஒரு வி ஐபி லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட  ரயில்கள் நிறுத்துவதற்கு  540 மீ நீளம் கொண்ட நடைமேடை தேவை.   தென்காசி மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் மட்டுமே  தென்காசி - நெல்லை ரயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற அனைத்து ரயில் வழித்தடங்களின் நடைமேடைகளின்  நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும். எனவே இந்த ரயில் நிலையங்களின் நடைமேடைகளின் வழித்தடத்தை நீடிக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 




மேலும் இதுகுறித்து தென்காசி மாவட்டம் திப்பணம்பெட்டியை சேர்ந்த ஜெகன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார். அதற்கு மதுரை ரயில்வே கோட்ட மூத்த பொறியாளர் சூரியமூர்த்தி அளித்த பதிலில், பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ரயில் நிலையங்களில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் தற்போது எதுவும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.




இது தொடர்பாக ஜெகன் கூறுகையில், "தற்போது நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் 15  பெட்டிகளுடனும், செங்கோட்டை -  தாம்பரம்  வாரம் மும்முறை அதிவிரைவு ரயில் 17  பெட்டிகளுடனும் தற்போது இயங்கி வருகின்றன. தற்போது செங்கோட்டை - தாம்பரம் ரயிலில் கூடுதலாக ஐந்து தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை - தென்காசி வழித்தடங்களில் உள்ள  முக்கிய  நிலையங்களான  சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம்  நடைமேடைகளின் நீளத்தை 540 மீ வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். அதிக பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்கள் பாவூர்சத்திரம்  ரயில் வழித்தடத்தில் கூடுதலாக இயக்க வேண்டும் என்றால் நடைமேடைகளின் நீளத்தை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டித்தால் மட்டுமே முடியும். எனவே நெல்லை - தென்காசி மக்கள் பயன்பெறும் வகையில் தெற்கு ரயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை - தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நெல்லை, தென்காசி மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.