தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரதி ஜிதேந்திர நாயுடு. எம்பிபிஎஸ் மருத்துவரான இவர் நேற்று முன் தினம் நெல்லை வந்துள்ளார். பின்னர் வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் உள்ள தனியார் விடுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக கூறி அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன் தினம் மாலை அறைக்குள் சென்றவர்  நேற்று பிற்பகல் வரை அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 


தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் அங்கிருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ஜிதேந்திர நாயுடு தனது உறவினர் மணீஸ் பூஷன் உட்பட 3 பேருடன் காரில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் மதுரை வந்த அவர்கள் காரில் தூங்கி உள்ளனர். அப்போது திடீரென ஜிதேந்திர நாயுடு காணாமல் போயுள்ளார். உடனே உறவினர்கள் தேடி பார்த்தும் கிடைக்காததால் மதுரை விளக்கு தூண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரை தேடி வந்ததும் தெரிய வந்தது. 


இந்த நிலையில் உறவினர்களுடன் சுற்றுலா வந்த ஜிதேந்திர நாயுடு எதற்காக நெல்லை வந்தார்? மேலும் நெல்லையில் அறை எடுத்து தங்கிய அவர் எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என உறவினர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் நெல்லைக்கு வந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060