நெல்லை டவுண் பகுதியில் இயங்கிவரும் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய வருவாய் துறை, பொதுப்பணித் துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளடக்கிய 18 சிறப்பு குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமையிலான அதிகாரிகள் குழு 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டது. இதில் விபத்து ஏற்பட்ட இடம் சரிந்து விழுந்த சுவர் மற்றும் கழிப்பறையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள், சமையலறை, பள்ளி சுற்றுச் சுவர் உள்ளிட்ட பகுதிகளும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் சுற்றுச்சுவர் சமையலறை வகுப்பறை கழிப்பறை போன்ற கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்கிறோம், நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது நெல்லை வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் ஆய்வு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளிக்கப்படுகிறது. இந்த அறிக்கையின் படி குறைபாடுகள் உள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சுட்டிக்காட்டும் குறைகளை சரிசெய்ய தவறும் பள்ளிகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
முன்னதாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டமான "இன்னுயிர் காப்போம்" திட்டத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்துகொண்டனர். நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 9 தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளுக்கான கடவுச்சொல்லை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் 3 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறும் பொழுது, தமிழகத்தின் எல்லைப் பகுதியில் விபத்து ஏற்பட்டால் உலகத்தில் எந்த பகுதியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பள்ளி விபத்து துரதிர்ஷ்டவசமானது, உயிரிழந்த பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நெல்லை மாவட்டத்தில் 17 குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய பிரித்து அனுப்பபட்டுள்ளனர். இந்த குழுக்கள் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்யும். அதனை தொடர்ந்து அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகளின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை சரி செய்ய தவறும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார் என தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி விபத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, அவர்கள் தவறு செய்தது தெரியவந்தால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.