காதல் காரணமாக வீட்டின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்து 56 ஆண்டுகளாக தமிழகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண்மணியின் நீண்ட நாள் ஆசையை அவரது மகன் நிறைவேற்றி 56 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாயை அவரது உறவினர்களை காண செய்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். தேன் சுவை சிந்தும் தமிழும், சுந்தர தெலுங்கும் இணைந்து சங்கமித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நம்மாழ்வார் (80). இவர் கடந்த 1960-களில் ஆந்திரா மாநிலம் நரசிப்பட்டினம் பகுதிக்கு டவர்லைன் அமைக்கும் பணிக்காக சென்றுள்ளார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கௌரி பார்வதி என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்தார். இவர்கள் காதல் விவகாரம் கௌரி பார்வதியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் ஜாதி, மொழி உள்ளிட்டவற்றை காரணமாகாட்டி இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.




அதனால் நம்மாழ்வாரும், கௌரி பார்வதியும் திருமணம் செய்ய வீட்டு வெளியேறி போது, விஜயவாடா நகரத்தில் கௌரி குடும்பத்தினர் பிடித்தது மட்டுமின்றி, நம்மாழ்வரை மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். போகும்பொழுது கௌரி, "என்னை 10 நாளுக்குள் வந்து அழைத்துச் செல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கூறியபடியே தன் உறவினர்களுடன் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த நம்மாழ்வார் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்துப்போயுள்ளார். அப்போது கௌரி பார்வதி சொன்ன வார்த்தைகள் தான் இவரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் மறுபடியும் கௌரி வீட்டாரின் மிரட்டல்களை மீறியும் நரசிப்பட்டினம் கிராமத்திற்கு சென்று யாருக்கும் தெரியாமல் அங்கேயே தங்கி, வேண்டப்பட்ட சில நபர்கள் மூலம் கௌரிக்கு தகவல் கொடுத்து திரும்பவும் ஊரைவிட்டு சென்றுவிடலாம் என்று கிளம்பி தமிழ்நாட்டில் உள்ள நம்மாழ்வாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை கிராமத்திற்கு அழைத்து வந்து நம்மாழ்வார் கௌரியை 1966-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.




திருமணம் செய்தப்பின்னர் ஆந்திராவுக்கு செல்லாமல் நம்மாழ்வார் இங்கேயே வேலை பார்த்துக்கொண்டு கௌரியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அய்யம்மாள், சண்முகராஜ், முத்துலட்சுமி என்று 2 மகள்கள் மற்றும் 1 மகன் என 3 குழந்தைகள் பிறந்துள்ளனர். இப்படியே இவர்கள் வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்து வந்துள்ளனர்.


வருடங்கள் பல செல்ல... கௌரிக்கு தன் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை இருந்தாலும், இத்தம்பதியினர் ஆந்திராவிற்கு சென்றால் கௌரி வீட்டார் இவர்கள் இருவரையும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தால் அங்கு செல்லாமலே இருந்து வந்துள்ளனர். அவர்களும் நம்மாழ்வாரும், கௌரியும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால் இருவீட்டாரும் பார்க்கமுடியாத சூழ்நிலையே நிலவி வந்துள்ளது. தற்போது கௌரி பார்வதிக்கு 75 வயதாகிறது. இவர் அடிக்கடி தன் கணவர் மற்றும் மகனிடம் இறப்பதற்கு முன்பு ஒருமுறையாவது தன் சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறி அழுதுள்ளார்.




இதனையடுத்து தனது தாயின் நீண்ட நாள் ஏக்கத்தை போக்க வேண்டும் என்று நம்மாழ்வார் - கௌரி பார்வதியின் மகன் சண்முகராஜ்(49) தனது மகனை அழைத்து கொண்டு இவர்கள் சொன்ன ஆந்திரா மாநிலம்  நரசிப்பட்டினம் கிராமத்திற்கு சென்று தன் தாய்வழி உறவினர்களை தேடி மொழி தெரியாத ஊரில் சுற்றி அலைந்துள்ளனர். பின் அங்கிருந்தவர்களிடம் கௌரி பார்வதி பெயரைக்கூறி விசாரித்ததில் தன் சொந்தங்கள் ஒவ்வொருவரையாக கண்டு தன் தாய்மாமன்கள், சித்தி, சித்தப்பா என அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு உங்களை நினைத்து தனது தாய் தினமும் வருத்தப்பட்டுக்கொண்டிருப்பது பற்றியும், உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்ற தன் தாய் ஆசை பற்றி எடுத்துக்கூறி கௌரியை பார்க்க வரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்களும் நாங்களும் பல ஆண்டுகளாக அவர்களை தேடினோம். ஆனால் அவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால் நாங்களும் வருத்தத்தில் தான் உள்ளோம்  உடனே வருகிறோம் என்று கூறியுள்ளனர்.




இதனைத்தொடர்ந்து மறுநாளே ஆந்திராவில் இருந்து கௌரி பார்வதியின் தம்பிகள், தங்கைகள், அவர்களின் குழந்தைகள், பேரன்கள் என 20-க்கும் மேற்பட்டோர் ஆந்திராவில் இருந்து மேலக்கரந்தைக்கு வந்துள்ளனர். இதனை ஒரு குடும்ப சந்திப்பு நிகழ்ச்சிக்காக மாற்றிய சண்முகராஜன் இவரின் சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் பல ஊர்களில் இருந்து வேன் பிடித்து வரவழைத்து இவர்களது வீட்டில் ஒரு விழாக்கோலத்தையே உண்டு பண்ணியுள்ளார்.




56 ஆண்டுகளுக்கு பின்னர், 16 வயதில் வீட்டை விட்டு வந்த கௌரியை பார்த்த அவரின் தம்பி, தங்கைகளும்... அதேபோல் சிறுபிள்ளைகளாக தனது தம்பி தங்கையை பாரத்த கௌரி பார்வதியும் சொல்லமுடியாத தங்களின் உணர்வுகளை கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர். பின்னர் தனது அனைத்து உறவுகளும் அறிமுகமாகிக்கொண்டு ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்வுற்றனர். நம்மாழ்வார் - கௌரி பார்வதியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள் என ஏராளமானோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். மேலும் அனைவரும் ஆனந்தமாக சிரிப்பலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.