சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதியின்றி தென்காசியில் மாவட்ட ஆட்சியர் கட்டிடம் கட்டும் பொது பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர்  எஸ்.பி.முத்து ராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் ரூ.119 கோடி மதிப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 6 மாடியில் ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகமாக கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணிதுறை சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.



 

தென்காசியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியானது தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி உத்தரவு இல்லாமல் நடந்து வருகிறது. இந்த செயல் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டபடி குற்றமாகும். எனவே, சுற்றுசூழல் துறை முன் அனுமதியின்றி தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடம் 13 ஏக்கரில் 6 மாடியில் கட்டும் பொது பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சுற்றுச்சூழல் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசு அலுவலகம் கட்டுமான பணி என்றாலும் சுற்று சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் கட்டுமானம் கட்டுவது விதி மீறல் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

 

சுற்று சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டப்படும்,  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியை ஏன் நிறத்த கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

 








மற்றொரு வழக்கு

 

புதுக்கோட்டை நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் சாலை அமைப்பதற்காக ஒப்பந்ததாரருக்கு  எட்டு சதவீத வட்டியுடன் வழங்க கோரி வழக்கு

 


 

புதுக்கோட்டை நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் சாலை அமைப்பதற்காக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட வேண்டிய ரூ2.22 கோடி மற்றும் ரூ7.15 கோடியை எட்டு சதவீத வட்டியுடன் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

 

புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக அரசு சாலை ஒப்பந்த வேலைகளை எடுத்து நடத்தி வருகிறேன். பல்வேறு ஒப்பந்தங்களை சிறந்த முறையில் முடித்துக் கொடுத்திருக்கிறேன். 2020-2021ஆம் ஆண்டு புதுக்கோட்டை நகராட்சி IUDM திட்டத்தின் கீழ் தைலாபுரம், சீனிவாசன் நகர், ராம்நகர் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் 2 கோடி மதிப்பில் சாலையும் 14வது நிதி கமிஷன் புதுக்கோட்டை நகராட்சி சாலை ரூ.22 லட்சம் பணிகளும் முடிக்கப்பட்டது.

 

இது போல் மற்றொரு வழக்கில் நபார்டு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை கிராமப்புற பகுதிகளில் 2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான சாலை பணிகள் கு2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான பணிகள், ரூ 2 கோடியே 15 லட்சம் சாலை அமைக்கும் திட்டத்திற்கான பணிகளும் முடிக்கப்பட்டது. இதற்கான பணம் தற்பொழுது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அலுவலகத்திற்கு சென்று நேரில் சந்தித்தபோதும் எந்த பயனும் இல்லை.


மேலும் தமிழக அரசிடம் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு பணம் தற்போது வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே, புதுக்கோட்டை நகராட்சி, கிராமப்புற பகுதியில் சாலை அமைத்ததற்காக எனக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2 கோடியே 22 லட்சம் மற்றும் ரூ.7 கோடியே 15 லட்சம் பணத்தை 8% வட்டியுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இப்போது நீதிபதி வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.