நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜு மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தை மேயர் சரவணன் வாசித்தார். அப்போது இந்திய ராணுவத்தில் பணி செய்து உயிர் நீத்தவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை இருமடங்காக உயர்த்தி வழங்கிய தமிழக முதலமைச்சர்க்கு நன்றி தெரிவித்தும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்களை கட்டிட கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ததற்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் தமிழினத்தின் எழுச்சிக்காக நடத்திய மொழி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனுபவித்த கொடுமைகள் ஏராளம். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என திராவிட தத்துவத்தை நிலை நாட்டிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சமூக நீதிக்காக போராடிய அவரது பேனாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நெல்லை வர்த்தக மைய வளாகத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 




முன்னதாக திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில் திமுக கூட்டணிக்கு 51 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக நான்கு உறுப்பினர்களுடன் உள்ளது. இந்த நிலையில் 30 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். அப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் நலத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   தொடர்ந்து சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் தொடங்கியதும் திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்  அவையில் கோரமில்லை எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் 27 உறுப்பினர்களுக்கு மேல் அவையில் உள்ளதால் கோரம் இருப்பதாக ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார். அவையின் மையப்பகுதியில் நின்று முழக்கங்கள் எழுப்பிய திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி அவரவர் இருக்கைக்கு ஆணையாளர் அனுப்பி வைத்தார். ஆனாலும் அவர்கள் தங்கள் இடங்களில் நின்று கொண்டு அவசரக் கூட்டத்தில் உள்ள தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது. அவசர கூட்டத்தை மொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவசரக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பணிகளுக்கு டெண்டர் கோரப்படுவதற்கான அவையின் அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்ததை மேயர் குறிப்பிட்டு தொடர்ந்து தீர்மானங்களை ஒத்திவைத்து சென்றால் மக்கள் பணி செய்ய முடியாது என தெரிவிக்க கூட்டத்தில் களேபரம்  ஏற்பட்டது.




மேயர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். வார்த்தை போர் கைகலப்பு ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியது. தொடர்ந்து கூட்டத்தில் அமளி ஏற்பட்டு வந்ததால் கூட்டத்தை பத்து நிமிட நேரம் ஒத்தி வைப்பதாக கூறி மேயர் அவையில் இருந்து வெளியேறினார். அமளி தொடர்ந்து நீடிக்கவே கூட்டம் ரத்து செய்யப்படுவதாக துணை மேயர் அறிவித்தார். இதனிடைய 15 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஜய் மண்டபத்தின் மையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேயர் தன்னை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் அவரை மாற்ற வேண்டும் அவர் நடத்தும் அவையில் என்னால் இருக்க முடியாது என அவர் முழக்கமிட்டார் பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் அவைக்கு வெளியே குவிக்கப்பட்டனர். கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அஜய்யுடன் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் மேயர் ஆதரவு தரப்பினர் ஒரு தனி நபருக்காக மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என  மறைமுகமாக திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளரை அவர்கள்  குற்றம் சாட்டினர். திமுக மாமன்ற உறுப்பினர்களே திமுக மேயருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண