சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். குறிப்ப்பாக நெல்லை அருகே பேட்டை காவல்  நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா பழக்கம் அதிகரித்து காணப்படுவதாக மாநகர நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரிக்கு அடிக்கடி புகார்கள் வந்து வண்ணம் இருந்துள்ளது. இதையடுத்து ஆணையாளர் மகேஸ்வரி உத்தரவின் பேரில்  நெல்லை மாநகர துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து பாண்டி, தலைமை காவலர் சேகர், ஆனந்த், அல்டஸ் பிவின் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையும் நடைபெற்றது. 


இந்நிலையில் பேட்டை கண்டியப் பேரி குளத்துக்கரை பகுதியில் சிலர் சந்தேகப்படும்படியாக நிற்பதாகவும், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கார் அடிக்கடி சென்று வருவதாகவும் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மீண்டும் வந்த அதே காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் உடனே காரில் இருந்த 5 பேர் கும்பல் தப்பியோட முயற்சித்தது. ஆனால் போலீசார் அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது அதில் 2 மூட்டைகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஏராளமான பண்டல்களில் சுமார் 25 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிடிபட்ட 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.. குறிப்பாக அந்த கும்பல் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து( வயது 27), தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த மதன் செல்வம்(22), தச்சநல்லூர் சத்திரம் புதுகுளத்தை சேர்ந்த முருகன்(20), அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜா( 23), பேட்டை கண்டியபேரியை சேர்ந்த அஜித்குமார் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது? எங்கு கொண்டு சென்று விற்பனை செய்ய உள்ளனர்?  இதுவரை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளனர்? மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கும்பலாக சேர்ந்து காரில் மூட்டை மூட்டையாக கஞ்சா விற்பனை செய்து வரும் சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.