ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 17 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக பணத்தை இழந்தவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். இதே போல, தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக லாபம் ஈட்டி தருவதாக்கூறி தனியார் நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


'எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நிதி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டித் தருவதாக ஏழை பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி விட்டுச் செல்வது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சன் மேக்ஸ் நிதி நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் தமிழகத்தில் குறைந்த தொகைக்கு அதிக லாபம் ஈட்டி தருவதாக விளம்பரம் செய்து நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.





சுமார் 1 நபர் முதலில் குறைந்த பட்ச தொகையாக 7000 ரூபாய் செலுத்தினால், 30 மாதங்களில் அவர்களுக்கு மாதம் 700 வீதம் சுமார் 21,000 வழங்குவதாக ஆசைவார்த்தை கூறுகின்றனர். இதனை உண்மை என நம்பி அதில் சுமார் பல லட்சத்திற்கும் மேலானோர் பணத்தை செலுத்தியும் உள்ளனர். கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் வரை அவர்களுக்கு மாதா மாதம் தரக்கூடிய தொகை 700 ரூபாய் அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளது அந்த நிறுவனம். மேலும் 1,05,000 பணம் செலுத்துபவர்களுக்கு கார் வழங்கப்படும் எனவும், மேலும் பல ஆஃபர்கள் இருக்கிறது எனவும் ஆசை வார்த்தை கூறி அதில் பல ஆயிரம் பேர் இந்த தொகையை செலுத்தி உள்ளனர்.




அதன் பிறகு யாருக்கும் எந்த தொகையும்தனியார் நிதி நிறுவனம் பணம் வழங்கவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது முறையாக பதில் தெரிவிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அதிகப்படியான உறுப்பினர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிக முதலீடுகளை செய்துள்ளனர். குறிப்பாக, பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் இதில் அதிக முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தின் முகவராக இருக்கக்கூடிய குமரேசனிடம் சென்று கேட்ட பொழுது அவரும் முறையாக பதிலளிக்கவில்லை. தொடர்ந்து பணத்தை இழந்தவர்கள் கோவையில் உள்ள அந்த தனியார் நிதி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று பார்த்த பொழுது நிறுவன பொறுப்பாளர் தொலைபேசியை அனைத்து வைத்து விட்டு, நிறுவனத்தை பூட்டுப் போட்டு பூட்டி விட்டு சென்றுள்ளார்.




மேலும், தென் தமிழகத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் சுமார் 250 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாகவும் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் யாரும் புகார் கொடுத்தால் அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.இதற்கு பயந்து பலபேர் புகார் கொடுக்காத நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவ்வாறு பண மோசடி செய்துள்ளனர் என்றும் தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் புகார் மனு அளித்துள்ளனர்.




அரசும் காவல் துறையும்  பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் அதிக வட்டிக்கும் லாபத்திற்கும்  ஆசைப்பட்டு இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் தொடர்ந்து பொதுமக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தேவையான விழிப்புணர்வை அரசு தொடர்ந்து பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வல்லுனர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.