கேட்பாரற்று கிடந்த பையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - நாகர்கோவில் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு

கேட்பாரற்று கிடந்த பைகளை ரயில்வே போலீசார் எடுத்து சோதனை செய்த போது சுமார் 6 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது

Continues below advertisement
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த ரயிலில் பயணிகள் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த பைகளை ரயில்வே போலீசார் எடுத்து சோதனை செய்த போது சுமார் 6 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்துள்ளது. கடத்தி வந்தவர் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை களைக்கட்டி உள்ளது. வட மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து விநியோகம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி உள்ளனர்.

 
போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும் கஞ்சாக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா கொண்டுவரப்பட்டு குமரி மாவட்டத்தில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் அனாதையாக பேக் கிடந்தது. அந்த பேக்கை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் மூன்று பொட்டலங்கள் இருந்தது. அவற்றை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரிய வந்தது. பேக்கிலிருந்த 6 கிலோ 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 வாரத்துக்கு முன்புதான் குமரி மாவட்டத்திற்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola