நெல்லை மாநகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் நடமாட  முடியாத சூழல் உள்ளது. இதனால் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை  கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் வந்த நிலையில் மாநகராட்சி சார்பிலும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த சூழலில் கடும் நடவடிக்கையாக மாடுகளை சாலையில் சுற்றி திரிய விட்டால் மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அபராத தொகையை செலுத்த தவறினால் மாடுகள் ஏலம் விடப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதற்கான நடவடிக்கையையும் எடுத்து வருகிறது.


இந்த நிலையில்  நெல்லை மாநகரின் பல்வேறு பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடியாக களத்தில் இறங்கி பிடித்தனர்.. மேலும் அவற்றை மேலப்பாளையம் மண்டலம் பகுதியில் கட்டி வைத்திருந்தனர். அதோடு பிடிபட்ட மாடுகளின் மாடுகளின்  உரிமையாளர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய அபராதத்தை செலுத்தி மாட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அக்காலகெடுவுக்குள் அபராத தொகையை செலுத்தாத நபர்களின் மாடுகள் ஏலம் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நெல்லை மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 63 மாடுகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்து வைத்திருந்தனர்.




மேலும் இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி அவரவர் மாடுகளை அபராதம் செலுத்தி அவிழ்த்து சென்றனர். குறிப்பாக பிடிபட்ட 63 மாடுகளில் 48 மாடுகளைச் சேர்ந்த உரிமையாளர்கள் இன்று அபராத தொகையை செலுத்தி தங்கள் மாடுகளை பெற்றுச் சென்றனர். ஒவ்வொரு மாட்டிற்கும் வயதை பொறுத்து குறைந்தபட்சம் 5,000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி இன்று ஒரே நாளில் மேலப்பாளையம் மண்டலத்தில் மட்டும் மாடுகள் பிடிக்கப்பட்ட வகையில் நெல்லை மாநகராட்சிக்கு மொத்தம் மூன்று லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 15 மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தவில்லை எனில் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அபராதம் மற்றும் ஏலம் விடுவது என மாநகராட்சியின் இத்தொடர் நடவடிக்கையால் இனி மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவது கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தனர்.