தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு பயன்படாத பொன் இனங்களை உருக்கி, சுத்த தங்கக் கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் வழங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.



திருச்செந்தூர் கோயிலில் காணிக்கையாக கிடைத்த 212 கிலோ தங்க நகைகள்- தங்கக்கட்டிகளாக உருக்கி வங்கியில் ஒப்படைப்பு


நிகழ்ச்சியில் 211.546 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மாலா முன்னிலையில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயலிடம் ஒப்படைத்தனர்.




பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, 2021-2022-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.




இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுத்து உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றி முதலீடு செய்திடும் வகையில் சென்னை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.




இப்பணிகளை கடந்த 13.10.2021 அன்று தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் மற்றும் மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு பக்தர்களால் உண்டியலிலும், காணிக்கையாகவும் செலுத்தப்பட்ட பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி சுத்த தங்கமாக மாற்றப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டு, இதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டித் தொகை அந்தந்த திருக்கோயில்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.


அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்களிலிருந்து கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் இதர உலோகங்களை நீக்கி, நிகர பொன்னினங்களை கணக்கிடும் பணியானது ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மாலா முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி திருக்கோயிலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் கிடைக்கப்பெற்ற ரூ.100 கோடி மதிப்பிலான 211.546 கிலோ எடையுள்ள பலமாற்று பொன் இனங்கள் உருக்கி, சுத்தத் தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில், அவைகள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  




இதனை மும்பையிலுள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் உருக்கி சுத்த தங்கமாக மாற்றி வங்கியில் தங்க முதலீடு பத்திரத்தில் 5 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ரூ. 2.58 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.12.50 கோடி வருவாயாக கிடைக்கும். இந்த நிதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். இதேபோல் தற்போது 10 கோயில்களில் இப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் 10 கோயில்களில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. வரும் காலங்களில் தங்கம் சேருவதற்கு ஏற்ப நகைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெறும். அதுபோல வெள்ளியும் விரைவில் தரம் பிரிக்கும் பணி நடைபெறவுள்ளது.திருச்செந்தூர் கோயிலில் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ. 200 கோடியும், அறநிலையத்துறை சார்பில் ரூ. 100 கோடியில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஹெச்.சி.எல். நிறுவன பணியில் 3 லட்சம் சதுர அடியில் பணிகள் தொடங்கி 30 சதவீதம் நடைபெற்றுள்ளது. திருக்கோயில் சார்பில் ரூ. 100 கோடி பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படவுள்ளது. திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் கோயில் இராஜகோபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய வெண்கல மணியை மீண்டும் செயல்பட வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.


இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.