கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். கஞ்சா வழக்குகளில் கைது செய்பவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கஞ்சா சோதனையில் மேற்கொண்டு வருகிறார்கள். மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரயிலில் கஞ்சா கடத்தப் படுவதாக ரயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் மற்றும் போலீசார் நேற்று நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்
அப்போது பொதுப் பெட்டி ஒன்றில் கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. அதை போலீசார் திறந்து சோதனை செய்தனர். அப்போது அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயிலில் கடத்திய கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு அவர்களை விசாரித்த போது கொன்னக்குழி விளையைச் சேர்ந்த பிரபீஸ் (வயது 24) சடையால் புதூரை சேர்ந்த அஜித்ராஜ் (31) வர்த்தகநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சகாயகவின் (24) என்பது தெரிய வந்தது. இவர்கள் சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து வாலிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. கஞ்சா வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தி லும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்