நெல்லை மாவட்டத்தில் கைபேசியை தவறவிட்டவர்கள் தொலைத்தவர்கள் தங்களது கைபேசி கண்டுபிடித்து கொடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர்கிரைம் பிரிவில் ஏராளமானவர்கள் புகார் அளித்திருந்த நிலையில் இதனை துரிதப்படுத்தி கைபேசியை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 10 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 70 கைபேசிகளை மீட்டனர். இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் சரவணன் கலந்து கொண்டு மீட்கப்பட்ட கைபேசி மற்றும் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மரக்கன்றையும் உரியவர்களிடம் வழங்கினார். இதுபோன்று ஏடிஎம் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறை மோசடியில் பணத்தை இழந்தவர்களின் பணம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 177 ரூபாயும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மாவட்டத்தில் இதுவரை கைபேசிகளை தவறவிட்டவர்கள் தொலைத்த வர்களிடமிருந்து பெறப்பட்ட புகாரில் 315 கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளது இவற்றின் மதிப்பு 39 லட்சத்து 74 ஆயிரத்து 135 ரூபாய் ஆகும் தற்போது 70 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த அக் 2010 இல் 50 கைபேசிகளும், டிசம்பரில் 114 கைபேசிகளும், ஜூன் 2021 இல் 100 கைபேசிகளும், செப்டம்பரில் 51 கைபேசிகளும், டிசம்பரில் 70 கைபேசிகளும் இதுவரை கைப்பற்றப்பட்டு உள்ளது. ஏடிஎம் கார்டு, பரிசு வந்திருப்பதாக ஓடிபி பெற்றுக்கொண்டு மோசடி வேலை வாங்கித் தருவதாக பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 176 ரூபாய் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 750 ரூபாய் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில் SMS லிங்க் மூலமாக பரிசு விழுந்திருப்பதாகவோ அல்லது KYC அப்டேட் செய்யசொல்லி மெசேஜ் வந்தாலோ link ஐ தொடாமல் புறக்கணிக்க வேண்டும், சமூக வலை தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ கால் பேசுவதை தவிர்க்க வேண்டும், அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் ஏடிஎம் கார்டு வழங்கல் மற்றும் ஓடிபி எது என்று கேட்டால் அதனை கொடுக்கக் கூடாது. இது தொடர்பான புகார்களை 15 52 60 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது www.Cybercrime.gov.in என்ற இணைய தளம் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என கூறினார்.