திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோயில் கடற்கரையில் அதிகளவில் கண்ணாடி போன்ற ஜெல்லி மீன்கள் கரை பகுதியில் ஒதுங்குவதாகவும், இதனால் பக்தர்களுக்கு தோல்வி பாதிப்பு அடைவதாக கூறப்படுகிறது. இதனை கண்டு பயப்படும் பக்தர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இதற்கிடையில் கடலில் பிடிப்பட்ட ஜெல்லி மீன்களை கோயில் இணை ஆணையர் கார்த்திக் கவனத்திற்கு கோயில் கடலோர பாதுகாப்பு குழுவினர் கொண்டு வந்தனர். இதுகுறித்து கடலோரப் பாதுகாப்பு குழுவினர் கூறியதாவது: திருச்செந்தூர் கோயில் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன இதனால் பக்தர்களுக்கு தோல் அலர்ஜி மற்றும் ஊறல் ஏற்படுகிறது. இந்த வகை மீன்கள் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடற்கரையில் காணப்படும். கண்ணாடி போன்று இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதிக விஷத்தன்மை கொண்டதாகும். எனவே கடலில் குளிக்கும் பக்தர்கள் மேல் பட்டது ஊறல் ஏற்படுகிறது. சில சமயம் ஊறல் ஏற்படுவதோடு தீப்பட்டது போல் தோல் உரிந்து விடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றனர்.




இதுகுறித்து கோயில் இணை ஆணையர் கார்த்திக் கூறுகையில், “கோயில் கடற்கரையில் ஜல்லி வகை மீன்கள் அதிக அளவில் காணப்படுவதாக என்னிடம் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து மீன்வளத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் அதன் பிறகு ஜெல்லி மீனின் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மேலும் இது போன்ற ஜல்லி வகை மீன்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். கடற்கரையில் எச்சரிக்கை போர்டு வைக்கப்படும்” என்றார்.


அழகான ஆபத்து- ஜெல்லி மீன்




ஜெல்லி மீனுக்கு சொறி மீன் என்ற பெயரும் உண்டு. சொறிமீன் என்பது குழியுடலிகள் இனத்தைச் சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினம் ஆகும். கடல் மீன்களிலேயே அழகானதும் ஆர்ப்பரிக்ககூடியதும் ஜெல்லி மீன் ஆகும். ஜெல்லி மீன்களின் உடலில் காணப்படும் தூரிகை போன்ற அமைப்பு உடலில் ஏதேனும் பகுதியில் பட்டால் உடனடியாக அந்த பகுதியில் ஒரு விதமான வலி ஏற்பட்டு அரிப்பு ஏற்பட தொடங்கி விடும். அதிலும் கடல் சாட்டை வகையைச் சேர்ந்த சொறி மீன் மனிதர்களை கடித்தால் மனிதர்களுக்கு மூச்சடைப்பை ஏற்படுத்துவதுடன், இதயத்தையும் செயலிழக்கச் செய்து ஒரு கட்டத்தில் மரணத்தை விடுவிக்கக் கூடியதாகவும் ஆபத்தான மீனாகவும் உள்ளன. மனிதர்களை கொல்லும் அளவுக்கு வலிமை உள்ளதாகவும் இந்த ஜெல்லி மீன்கள் இருக்கின்றன. கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நீந்தும் போது பார்ப்பதற்கு இந்த ஜெல்லி மீன் அழகாக தெரிந்தாலும் மிகவும் ஒரு ஆபத்தான மீன் என்று சொல்லலாம். உலகம் முழுவதும் உள்ள கடல் பகுதியில் 2 ஆயிரம் வகையான ஜெல்லி மீன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.