சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு, 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன்படி வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனத்துடன் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி மற்றும் பேட்டரி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடனடியாக இந்த நிறுவனத்துக்கு தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட்டில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.




இதனை தொடர்ந்து மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு வின்குரூப் நிறுவன இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான் சாவ் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.இந்த ஆலை முதல் கட்டமாக ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த மின்வாகன உற்பத்தி ஆலையாக அமைக்கப்பட உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் வாகன உற்பத்தி திறன் கொண்டதாக அமைய உள்ளது.




இதுகுறித்து வின்குரூப் நிறுவன இந்திய தலைமை நிர்வாக அதிகாரி பாம் சான் சாவ் கூறும் போது, ”தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 50 நாட்களுக்குள் ஆலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். 25-02-2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டுமான பணிகள் தொடங்கும். மொத்தமாக ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறோம். இதில் முதல் கட்ட பணிகள் ரூ.4 ஆயிரம் கோடியில் நடக்கிறது. முதல் கட்ட பணிகள் 5 ஆண்டுகளில், அதாவது 2029-ல் முடிவடையும். இதில் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். தூத்துக்குடி ஆலையில் இருந்து முதலாவது மின்சார கார் 2025-ம் ஆண்டு மத்தியில் உற்பத்தியாகி வெளியே வரும்.




இந்த ஆலையில் இருந்து உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளோம். முதல் கட்டமாக இந்தியாவில் தான் விற்பனை செய்யப்படும். அதன் பிறகே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படும். பெரிய கப்பல்கள் வரும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும். முதல்கட்டமாக இந்தியாவில் விற்பனை செய்யவே திட்டமிட்டுள்ளதால், துறைமுக நிர்வாகத்துடன் இன்னும் பேச்சுவார்த்தை ஏதும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் முழுமையான மின்சார கார்களை தயாரிக்க உள்ளோம். இந்த கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 முதல் 400 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் அளவுக்கு இருக்கும். இந்த கார்களுக்கான பேட்டரிகளை வீடுகளிலும், வெளியே உள்ள மையங்களிலும் சார்ஜ் செய்ய முடியும். மேலும், இந்தியாவில் மின்சார கார்களுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கான மையங்களை அதிகமாக அமைக்க, மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். தூத்துக்குடியில் துறைமுகம், விமான நிலையம், மனிதவளம், தமிழக அரசின் ஒத்துழைப்பு போன்றவை சிறப்பாக இருப்பதால் தான் இந்த தொழிற்சாலையை தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தோம். தமிழக அரசின் ஒத்துழைப்பு மிக மிக சிறப்பாக இருக்கிறது” என்றார்.