தினசரி தேவைக்காக மக்கள் செலவு செய்யும் பணத்தை குறிப்பதே நுகர்வு செலவினம் (Consumption Expenditure). எளிதாக சொல்ல வேண்டுமானால், வீட்டின் தினசரி செலவை குறிக்கிறது. உணவு, மின்சாரம், வீட்டு வாடகை, தொலைபேசிக்கான கட்டணம், ஆடை வாங்குவது உள்ளிட்டவைக்காக மக்கள் செலவு செய்யும் மொத்த பணமும் இதில் அடங்கும்.
மத்திய அரசின் தரவுகள் சொல்வது என்ன?
மக்கள் எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பது தொடர்பான தரவுகளை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு (Household Consumption Expenditure Survey) நடத்தி வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் துறை, இந்த கணக்கெடுப்பை எடுத்து வெளியிடுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 2017-18ஆம் ஆண்டு, நுகர்வு செலவின கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆனால், தரவுகளில் கோளாறு இருப்பதாகக் கூறி, அதன் முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை.
இந்த நிலையில், 11 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு, நுகர்வு செலவினம் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கணக்கெடுப்பு பணிகள், கடந்தாண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது.
"உணவுக்காக மக்கள் செலவு செய்வது குறைந்துள்ளது"
தரவின் முக்கிய முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகவும் ஏழையாக உள்ள 5 சதவிகித மக்கள், ஊரகப் பகுதிகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 46 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர். அதேபோல, நகர்புறங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 67 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர்.
அதற்கு நேர்மாறாக, இந்தியாவில் மிகவும் பணக்காரராக உள்ள 5 சதவிகிதத்தினர், ஊரகப் பகுதிகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 350 ரூபாய் செலவு செய்கின்றனர். நகர்புறங்களில் வாழும் பணக்காரர்கள், நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 ரூபாய் மட்டுமே செலவு செய்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம், மக்களிடையே வருமானத்தில் பெரிய அளவில் சமத்துவமின்மை நிலவுவது தெரிய வந்துள்ளது.
அதேபோல, நகர்புறங்களில் மக்களின் மாதாந்திர தனிநபர் வீட்டு செலவு கடந்த 2011-12 ஆண்டை ஒப்பிடுகையில் 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, நகர்புறங்களில் தனிநபர் வீட்டு செலவு, 3,510 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஊரகப் பகுதிகளில் மக்களின் மாதாந்திர தனிநபர் வீட்டு செலவு 40.42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, 2,008 ருபாயாக அதிகரித்துள்ளது.
உணவுக்காக மக்கள் செலவு செய்யும் விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துவிட்டது. 2011-12 ஆம் ஆண்டு, ஊரகப் பகுதிகளில் உணவுக்காக செலவு செய்யும் விகிதம் 52.9 சதவிகிதத்தில் இருந்து 46.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. நகர்புற பகுதிகளில், தங்களின் மொத்த செலவினத்தில் உணவுக்காக செலவு செய்யும் விகிதம் 42.6 சதவிகிதத்தில் இருந்து 39.2 சதவிகிதமாக குறைந்துள்ளது.