கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய், தந்தையை இழந்த 10 குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை ஆகும் முழுச் செலவுத் தொகையையும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் என வரிச்சூர் செல்வம் திருச்செந்தூரில் பேட்டியளித்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரகணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டு செல்வது வழக்கம். பௌர்ணமி தினம் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் முருக பெருமானை தரிசனம் செய்வதற்காக வரிச்சூர் செல்வம் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலில் அதிக கூட்டத்தின் காரணமாக வரிச்சூர் செல்வம் கோவிலில் முன்பு நின்று தரிசனம் செய்தார். அப்போது வரிச்சூர் செல்வம் அணிந்திருந்த 200 பவுன் மதிப்புள்ள தங்கத்தினை அங்கு வந்துள்ள பக்தர்கள் பலரும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர். பின்னர் கோவிலில் வெளியே வந்த வரிச்சூர் செல்வத்திடம் ஏராளமான பக்தர்கள் மற்றும் நரிக்குறவ இன மக்கள் பலரும் செல்பி எடுத்து கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் இறந்து விட்டார்கள். மீதி உள்ளவர்கள் நலம் பெற வேண்டி திருச்செந்தூர் முருகனிடம் வேண்டி வந்துள்ளேன். இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தாய் தந்தையை இழந்த 10 குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையில் ஆகும் முழுச் செலவுத் தொகையையும் நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன். இதுபோல் சாராயம் குடிக்க வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள். நான் எந்த கட்சியிலும் இணையவில்லை. இணையும் எண்ணமும் எனக்கு இல்லை. விஜய் கட்சி ஆரம்பித்து வளர்வது சந்தோஷம் தான். மக்களுக்கு நல்லது செய்யட்டும்” என்றார்.