திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் நீராடிய போது 10க்கும் அதிகமான பக்தர்களுக்கு கால் முறிவு மற்றும் காயம் ஏற்பட்டது. கடல்சீற்றம் மற்றும் பாறைகள் நிறைந்த கடலில் குளித்தால் பக்தர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.




அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் 22 தீர்த்த கட்டங்களை உள்ளடக்கியது. இதனால் இந்த கடலில் பக்தர்கள் புனித நீராடுவதை தனி சிறப்பாக கருதுகின்றனர். இந்த கடல் பகுதி பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் தினங்களில் உள்வாங்குவதும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமான ஒன்றாகும்.




இந்நிலையில் கோடை விடுமுறை, ஞாயிறு விடுமுறை மற்றும் முகூர்ந்த தினம் என்பதால் திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கடலில் குளித்த போது அலையின் வேகத்தால் அவர்கள் கரைக்கு அடித்துச் செல்லப்பட்டனர். அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.




இதில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் (64), கரூரைச் சேர்ந்த தங்கம் (54), கோயம்புத்தூரைச் சேர்ந்த கண்ணம்மா (70), ராமநாதபுரத்தை சேர்ந்த பாக்கியம் (70), தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துமாரி (22) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு சம்பவங்களில் காயம் ஏற்பட்டது. சிலருக்கு கால் எலும்பு முறிவும், சிலருக்கு கால் சுளுக்கும் ஏற்பட்டது. இவர்களை கடலோர பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக மீட்டு கோயில் முதலுதவி மருத்துவ மையத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.




திருச்செந்தூர் கோயில் கடல் பகுதி பாறைகள் நிறைந்த பகுதியாகும். அதிலும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது நீராடும் பக்தர்களுக்கு பாறை இருப்பது தெரியாமல் சில சமயங்களில் அதில் இழுத்து செல்லப்பட்டு சிக்கி விடுவது உண்டு. இதனாலே பலமுறை பலருக்கு கால் முறிவு மற்றும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். முந்தைய  காலங்களில் கோயில் கடற்கரையில் பாறைகள் நிறைந்த பகுதி என பக்தர்களுக்கு எச்சரிக்கை செய்யும் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் அந்த போர்டும் காணாமல் போய்விட்டது. கடல் பாறைகள் இருப்பது தெரியாமல் ஆபத்தை உணராமல் குளிக்கும்போது விபரீத நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இனி வருங்காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பாறையில் குறித்து எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.