திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த மாற்றுத்திறனாளி பெண் பக்தருக்கு சக்கர நாற்காலி வழங்காமல் கோவில் நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகத்திடம் உதவி கேட்டும் செய்யவில்லை என மாற்றுத்திறனாளி பெண் பக்தர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அறுபடை வீடுகளுள் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில் சென்னை வடபழனி- சாலிகிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பக்தர் பாக்கியலெட்சுமி(55) என்பவர் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியாக வந்துள்ளார். இந்தநிலையில் கோவில் நுழைவுப்பகுதிக்கு ஆட்டோவில் வந்த அவர் மேற்கொண்டு செல்ல முடியாமல் நுழைவுவாயில் பகுதியில் தவித்துள்ளார். கோவில் வளாகத்திற்கு செல்வதற்கு செல்ல பேட்டரி வாகனத்தை நாடியுள்ளார். ஆனால் ஓட்டுநர் கூட்டம் அதிகமாக இருந்ததால் பேட்டரி வாகனம் ஓடாது எனக்கூறி உதவி செய்ய மறுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.
இதனையடுத்து தனக்கு சக்கர நாற்காலி வழங்கி தன்னை கோவில் வளாகத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவரை தரிசனத்திற்கு சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்ல கோவில் நிர்வாகம் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாற்றுத் திறனாளிப் பெண் பக்தர் பரிதாபமாக அங்கேயே பல மணி நேரமாக காத்திருந்தார்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி கூறுகையில், பௌர்ணமி தினத்தில் தரிசனம் செய்து விடலாம் என்று வந்தேன் இவ்வளவு கூட்டம் உள்ளது என எதிர்பார்க்கவில்லை தனியாக வந்ததால் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் உதவி கேட்டும் செய்யவில்லை என மனவேதனையுடன் தெரிவித்தார். தமிழக அரசு, கோவிலில் நிர்வாகம் மாற்றுத்திறனாளி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மனவேதனையுடன் கோரிக்கை விடுத்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் தரிசனம் செய்ய தனியே வந்த மாற்றுத்திறனாளி பெண் பக்தருக்கு காவல்துறையினரும் கோவில் நிர்வாகமும் உதவி செய்யாமல் அலைக்கழித்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.