திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா இன்று உச்சக்கட்டத்தை எட்டுகிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று மாலை (28.10.2025) நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை  போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.

Continues below advertisement

கந்தசஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி, இன்று சூரசம்ஹாரம் மற்றும் நாளை(28.10.25)  திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவடைகிறது.

சூரசம்ஹாரம் என்றால் என்ன?

சூரசம்ஹாரம் என்பது தீய சக்தியை அழித்து நல்லதின் வெற்றியை குறிக்கும் சின்னமாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். புராணங்களின்படி, அசுரன் சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் ஆறு வேறு தெய்வீக சக்திகளாக களமிறங்கி போரிட்டு, இறுதியில் அவனை அழிக்கும் காட்சி ‘சூரசம்ஹாரம்’ எனப்படுகிறது. இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருச்செந்தூரில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 

Continues below advertisement

போக்குவரத்து கட்டுப்பாடுகள்

பக்தர்கள் அதிகமாக கூடி உள்ள்தால் திருச்செந்தூரில் ஏற்படக்கூடிய நெரிசலை தவிர்க்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கடந்த இரண்டு நாட்களுக்கு (அக்டோபர் 26 மற்றும் 27) சிறப்பு போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,

  • தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

  • இதேபோல், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், மற்றும் சாத்தான்குளம்–பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, “சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாள்களில் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் சூழல் நிலவுகிறது. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் அவசியமானவை” என தெரிவித்தனர்.

திருவிழா நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் பொது போக்குவரத்தையே பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்கள்:

அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.1. தூத்துக்குடியிலிருந்து ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் ITI வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையதில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப்பேருந்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular/Shuttle Bus) மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம், GH Back Side, மெயின் ஆர்ச் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. திருநெல்வேலியிலிருந்து குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular/Shuttle Bus) மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில், முருகாமடம், GH Back Side, வழியாக மீண்டும் தற்காலிக பேருந்து நிலையம் வந்து நிற்கும்.

3. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் மற்றும் கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையிலுள்ள FCI குடோனுக்கு மேற்கு பகுதியில் (சர்வோதயா அருகில்)

அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular/Shuttle Bus) முருகாமடம், GH Back Side, மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம் வழியாக மீண்டும் தற்காலிக பேருந்து நிலையம் வந்து நிற்கும்.

பக்தர்களின் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்பந்தமான விபரங்கள் :

அதன்படி தூத்துக்குடியிலிருந்து ஆறுமுகநேரி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் J.J.நகர், ஆதித்தனார் கிரிக்கெட் மைதானம், ITI எதிர்புறம் (விடுதி அருகில்), ஆதித்தனார் மாணவர் விடுதி எதிர்புறம் ஆகிய 4 வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் திரும்பிச் செல்லும் போது வீரபாண்டியபட்டிணம் வழியாக காயல்பட்டிணம் பேருந்து நிலையம், ஆறுமுகநேரி Costal Check Post வழியாக வெளியே செல்லவும்,திருநெல்வேலியிலிருந்து குரும்பூர் சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் வாகனங்கள் வியாபாரிகள் சங்கம் (சபி டிரேடர்ஸ் எதிர்புறம்), அன்புநகர் (குமாரபுரம்), குமரன் ஸ்கேன் சென்டர் எதிர்புறம், குமாரபுரம், ஆதித்தனார் குடியிருப்பு (கோவிந்தமாள் கல்லூரி எதிர்புறம்), அருள்முருகன் நகர் (கிருஷ்ணாநகர் வாகன நிறுத்தம் ஆகிய 6 வாகன நிறுத்துமிடங்களில் வாகனத்தை நிறுத்தவும், திரும்பிச் செல்லும் போது அதே வழித்தடமான குரும்பூர் சாலை வழியாக செல்லலாம்,

நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக பரமன்குறிச்சி சாலை வழியாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் FCI குடோன் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் லேண்ட், சுந்தர் லேண்ட், செந்தில்குமரன் பள்ளி வளாகம் ஆகிய 3 வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தவும், திரும்பிச் செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்,கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து பரமன்குறிச்சி சாலையில் வலதுபுறம் திரும்பி FCI குடோன் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர லேண்ட் வாகன நிறுத்தம், சுந்தர் லேண்ட வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் வாகனத்தை நிறுத்தவும், திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.

மேற்படி தூத்துக்குடி வழியாகவும், திருநெல்வேலி வழியாகவும், நாகர்கோவில் திசையன்விளை சாத்தான்குளம் வழியாகவும், கன்னியாகுமரி உவரி குலசேகரன்பட்டினம் வழியாகவும் கந்த சஷ்டி திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு பக்தர்கள் நலன் கருதி அங்கிருந்து அரசு பேருந்துகள் மூலம் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.