முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமான் சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்த நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதுவும் சூரனை வதம் செய்த இடம் திருச்செந்தூர் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார உற்சவம் முக்கியத்துவம் வாய்ந்தது.அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி (22.10.2025) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர். கந்தசஷ்டி விழா தொடங்கியது முதல் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வாகன வீதி உலா நடைபெற்று வருகின்றன.

Continues below advertisement




இந்நிலையில், கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.பின்னர் அன்னையிடம் இருந்து பெற்ற சக்தி வேலுடன், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காக போர்க்கோலத்தில் புறப்பட்டார். மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.  சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். சஷ்டி விரதம் இருந்த பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.அதன்பின்னர் போர் தொடங்கியது.




முருகப்பெருமானை எதிர்கொள்வதற்காக அசுர படையும் தயாரானது. முதலில் மாயையே உருவான யானை முகம் கொண்ட  நரகாசுரன், அதன்பின்னர் சிங்கமுகாசுரன் ஆகியோரை வேல் கொண்டு வீழ்த்தினார் முருகப்பெருமான். அதன்பின்னர் ஆணவத்தால் அடிபணிய மறுத்த சூரனை வதம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான். அவனை தனது வாகனமான மயிலாகவும், சேவற்கொடியாகவும் ஏற்றுக்கொண்டார்.இதை பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில், சூரனின் சப்பரத்தில் வெட்டுண்ட தலைக்கு பதில் சேவல் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த சேவல், முருகப்பெருமானின் கொடியில் கட்டப்பட்டது. இத்துடன் சூரசம்ஹார நிகழ்வு நிறைவு பெற்றது.




சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கந்த சஷ்டி விழாவின் அடுத்த நிகழ்வாக முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் நாளை நடைபெற உள்ளது. அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது.