தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வாகனத்தில் வந்த நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படும் நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில் காணாமல் போனார்.

Continues below advertisement

கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடிய நிலையில் கடந்த 11ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து மாணவியின் உறவினர்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

மேலும், கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து திணறி வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில், சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில் அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி வந்திருப்பது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த மர்ம நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தர்ம முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவியை ஏன் கொலை செய்தார்? எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து போலீசா தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.