தூத்துக்குடி என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது ஸ்டைர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தான். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதாவது தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையாலும் கழிவுகளாலும் நிலத்தடி நீர் வீணாகி, சுவாசக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 

Continues below advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

இதுதொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அப்பகுதி சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதியான முறையில் பேரணியாக சென்றனர். அப்போது திடீரென ஏற்பட்ட கலவரத்தையடுத்து ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர், வேடிக்கை பார்த்து நின்ற மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

அருணா ஜெகதீசன் ஆணையம்

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகியிருந்தன.  குறிப்பாக மஞ்சள் டிசர்ட் அணிந்திருந்த காவலர் ராஜாவின் படம்தான் அதிகளவில் சமூகவலைதளத்தில் வைரலாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தியது. 

அதில் துப்பாக்கிச்சூட்டில் முதன்மையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சுட்டுக்கொன்றதில் சுடலைக்கண்ணும், கூலிப்படைப்போல செயல்பட்டதாகவும் அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியது. அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், சுடலைக்கண்ணு உள்ளிட்ட போலீசார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. காவலர்கள் சுடலைக்கண்ணு, ராஜா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யச் சொல்லி, அருணா ஜெகதீசன் ஆணையம் அறிவுறுத்தியும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

காவலர் ராஜா உயிரிழப்பு

இந்நிலையில், காவலர் ராஜாவுக்கு சமீபத்தில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ராஜா உயிரிழந்தார். ராஜாவுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.