தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்




தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான சுற்றுவட்டார கிராம மக்கள், ஒப்பந்தக்காரர்கள், லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள், தூத்துக்குடி வாழ்வாதார இயக்கத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள் திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100வது நாள் போராட்டத்தின்போது வன்முறை சம்பவம் நடந்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு. தற்போது வரை மூடிக்கிடக்கிறது. எனவே மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. அவ்வழக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அந்த ஆலையானது ஒரு தேசிய சொத்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஆலையை முடக்கி விட முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.




உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தானது ஸ்டெர்லைட் ஆலையை நம்பி வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும் மற்றும் இந்நிறுவனம் மூலம் கிடைக்கப்பெற்ற உபரி பொருள்களை வைத்து சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை நடத்தி வந்த 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபார பெருமக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் பலன் அடைந்த தூத்துக்குடி மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 25,000க்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெற்று பலன் அடைந்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நம்பி 1000க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வந்தன. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பணப்புழக்கம் மிகுந்து காணப்பட்டது. இதனால் இங்குள்ள வியாபாரிகள் பெரிதும் பலன் அடைந்து வந்தனர்.




தூத்துக்குடியின் வேகமான வளர்ச்சியில் ஸ்டெர்லைட் ஆலையின் பங்கு அளப்பரியது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக தொடர்ந்து ஆலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பொருளாதாரம் மற்றும் தொழில் சரிவை பார்த்த தூத்துக்குடியின் பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்கிற மனநிலைக்கு வந்துள்ளனர். அறிவியல் பூர்வமாக தொழிற்சாலையை ஆய்வு செய்து நிபுணர் குழுவை அமைத்து ஆலையை இயக்கலாம் என்பது நீதிபதிகளின் கருத்து. எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லாமல் மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு மீண்டும் போராட்டத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்களின் எண்ணத்திற்கு ஆரம்பத்திலேயே அரசு தடை போட்டு, மக்களை காப்பாற்ற வேண்டும். எனவே, அறிவியல் ஆதாரம் இல்லாமல் நச்சு, மாசு, கழிவு என்று மக்களை ஏமாற்ற நினைப்பவர்களை தமிழக அரசு புறந்தள்ள வேண்டும். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடுகிறவர்களை விட அந்த ஆலையால் பலன் அடைந்தவர்களே தூத்துக்குடியில் அதிகம். ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருந்த மற்றும் வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.