தூத்துக்குடி- பாலக்காடு, மேட்டுப்பாளையம் ரயில்களுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை இயக்கப்படவில்லை. ரயில்கள் இயக்கப்படுமா அல்லது வெறும் அறிவிப்போடு ரத்தாகிவிடுமா.




பாலக்காடு- திருநெல்வேலி இடையே தினமும் இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்த ரயிலுக்கான புதிய எண்கள் மற்றும் கால அட்டவணை அறிவிக்கப்பட்டது. சுமார் 4 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 10 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படவில்லை.




இதேபோல் கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயிலுக்கு மாற்றாக தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த ரயில் இதுவரை இயக்கப்படவில்லை. இதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் இயக்கப்பட்டுவிட்ட நிலையில் தூத்துக்குடிக்கான பாலருவி ரயில் நீட்டிப்பு மற்றும் மேட்டுப்பாளையம் புதிய ரயில் ஆகியவை மட்டும் இன்னும் நடைமுறைக்கு வராதது தூத்துக்குடி மாவட்ட பயணிகளை மிகுந்த ஏமாற்றமடைய செய்துள்ளது.




இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் சங்கத்தினர் கூறும்போது, “ரயில்வே வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்பட்ட தூத்துக்குடி- பாலக்காடு ரயில் மற்றும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் புதிய ரயில் ஆகிய இரு ரயில்களும் இதுவரை இயக்கப்படவில்லை. இதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட பல ரயில்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து நீண்ட காலமாகியும் இந்த ரயில்கள் இயக்கப்படாததால், இந்த ரயில்கள் அறிவிப்போடு ரத்தாகிவிடுவோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.




ஏற்கனவே தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட்ட கோவை இணைப்பு ரயில் மற்றும் சென்னை பகல் நேர ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அவைகளுக்கு பதிலாகவே இந்த இரு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை அந்த ரயில்களை இயக்காமல் ரயில்வே நிர்வாகம் காலம் கடத்தி வருவது வேதனை அளிக்கிறது.இந்த ஆண்டு தூத்துக்குடிக்கு கோடை சிறப்பு ரயில்களும் இயக்கப்படவில்லை. ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து தூத்துக்குடியை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்த்து வருகிறது.


இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து மனு அளித்தாலும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எனவே, தூத்துக்குடிக்கு அறிவிக்கப்பட்ட 2 ரயில்களையும் உடனடியாக இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.