தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் குறுவட்டம் வெளவால் தொத்தி வருவாய் கிராமம் அழகம்மாள் W/0 ராஜகோபால் (லேட்) என்பவர் கடந்த 05.06.2021ம் ஆண்டு அன்று வெளவால் தொத்திகிராமத்தில் வைத்து வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். அழகம்மாள் கணவர் ராஜகோபால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இறந்த அழகம்மாளுக்கு அன்னலட்சுமி, சரஸ்வதி, கோப்பம்மாள் என மூன்று பெண் மக்கள் உள்ளனர். அழகம்மாள் பெயரில் வெளவால் தொத்தி கிராமத்தில் புல என் 96/1B, 96/1E ஆகிய நிலத்தில் பரப்பு சுமார் 0.73 ஏர் நிலம் உள்ளது. அந்நிலத்தை கடந்த ஜமாபந்தி சமயத்தில் 18.06.2024 அன்று வாரிசு உரிமைப்படி பட்டா மாறுதல் செய்ய அன்னலட்சுமி ஆன் லைனில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் நேற்றைய முன் தினம் அன்று விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து அன்னலட்சுமியிடம் புதிய பட்டா வழங்கப்பட்டது. புதிய பட்டாவை பார்த்த அன்னலட்சுமி அதிர்ச்சி அடைந்து விட்டார். ஏனெனில் புதிய பட்டாவும் 3 வருசத்துக்கு முன் இறந்து போன தனது தாய் அழகம்மாளின் பெயரிலேயே இருந்தது. இதனால் பட்டா மாறுதல் பெற அன்னலட்சுமி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும் போது, "விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக விவசாயி அன்னலட்சுமி விண்ணப்பம் செய்திருந்தார்.அதில் தனது தாய் அழகு அழகம்மாள் பெயரில் உள்ள 1.82 ஏக்கர் நிலத்தை அவரது வாரிசுகளான தங்களது பெயர்களின் பட்டா மாற்றம் செய்து தரும்படி வேண்டி இருந்தார். அழகம்மாள் பெயரில் இருந்த பட்டா எண் 24 ஆகும். அதனை இரண்டாக பிரித்து 1557, 1558 என வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் உத்தரவில் பட்டா மாறுதலுக்கு முன் மற்றும் பட்டா மாறுதலுக்கு பின் ஆகியவற்றில் அழகம்மாள் பெயரே உள்ளது. அதாவது இறந்தவர் பெயருக்கே மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களின் அலட்சிய போக்கை காட்டுகிறது. இந்த நிகழ்வு வேதனையான ஒன்றாக உள்ளதால் கூறும் இவர், விவசாயிகளை அவமதிக்கும் செயலாக இதைப் பார்க்கிறோம் என்றார்.மேலும் இதுபோன்ற தவறுதலாக பட்டா மாறுதல் செய்ய அலுவலகர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.