நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 




                                                நெல்லை மேட்டுப்பாளையம் வாரந்திர சிறப்பு ரயில்


நெல்லையில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நெல்லை மேட்டுப்பாளையம் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி மற்றும் ராஜபாளையம் விருதுநகர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திங்கட்கிழமை காலை 7:15 மணிக்கு சென்றடையும். நெல்லை தென்காசி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் பொதுமக்கள் முன்பதிவு செய்து சென்று வருகிறார்கள்.




                                                           கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம்


இந்த நிலையில் நேற்றிரவு 7:00 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் சுமார் 7.40 மணியளவில் நிற்காமல் சென்றது. இதனால் கல்லிடைக்குறிச்சியில் இறங்க வேண்டிய சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள், அம்பை ரயில் நிலையத்தில் இறங்கி உள்ளனர். இதே போல் கல்லிடைக்குறிச்சியில் இருந்து பழனி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு டிக்கெட் எடுத்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் ரயில் நிற்காததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். 




உடனடியாக கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பயணிகள் கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலைய அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.என்ன காரணதிற்காக ரயில் நிற்காமல் சென்றது? என கேட்டனர். இந்த நிலையில் ரயில் பயணிகள் நலச் சங்கம் மற்றும் ரயில்வே நிலைய அலுவலர் ரயில்வே மதுரை கோட்ட அலுவலரிடம் தொடர்பு கொண்டதின்பேரில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிற்காமல் சென்றதால் ரயிலை தவற விட்ட பயணிகளுக்காக ஈரோட்டில் இருந்து 09.25 மணிக்கு செங்கோட்டை செல்லும் விரைவு பேசஞ்சர் ரயிலில் கல்லிடையில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றி சுமார் 10.20 மணியளவில் தென்காசி செல்லும். மேட்டுப்பாளையம் ரயிலை தவறவிட்ட கல்லிடைக்குறிச்சி பயணிகள் இந்த ரயில் ஏறி தென்காசி சென்று பயணிப்பதற்கு வசதியாக மேட்டுப்பாளையம் ரயிலை தென்காசி ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைத்து தென்காசியில் இருந்து 9 40 க்கு செல்ல வேண்டிய மேட்டுப்பாளையம் ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 10.40 க்கு தென்காசியில் இருந்து புறப்பட்டு சென்றது. 


ரயிலின் லோகோ பைலட்டின் கவனக்குறைவினால் ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் அனைத்து பயணிகளும் பெரும் அவதி அடைந்தனர்.பேருந்தைப் போல ரயிலும் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற இந்த நிகழ்வு நேற்று இரவு திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதி பயணிகளிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.




                                                இரண்டு லோகோ பைலெட்டுகளை சஸ்பெண்ட்


இந்நிலையில் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு வாராந்திர ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற விவகாரம் இரண்டு லோகோ பைலெட்டுகளை சஸ்பெண்ட் செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டது. நேற்று ஜூலை ஏழாம் தேதி நெல்லையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது.முன்பதிவு செய்த கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளை பின்னால் வந்த ஈரோடு ரயில் மூலம் ஏற்றி ஒரு மணி நேரம் காத்திருந்து தென்காசி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விவகாரத்தில் சீனியர் லோகோ பைலட் விஷ்ணு மற்றும் உதவி லோகோ பைலட் சண்முக வேலாயுதம் ஆகியோர் சஸ்பெண்ட் செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டது.