தூத்துக்குடி மாநகராட்சியில் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.




தூய்மை பாரத ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் (AICCTU) சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்யும் தொழிலாளர்கள் நான்கு மண்டலத்தை சேர்ந்த (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இவர்களது கோரிக்கைகளான, மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-/ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். PF, ESI தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.. ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதிக்குள் வழங்க வேண்டும், அறிவிப்பு இல்லாமல் பண பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும்... தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி ஓட்டுநர்களுக்கு வார விடுப்பு வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மரணமடைந்தால் சட்டப்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஓட்டுனர்களை பழிவாங்கும் மண்டல மாறுதல் உத்தரவினை கைவிட வேண்டும் போன்ற 19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 26, அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், மாநகராட்சி சார்பில் கோரிக்கைகள்  நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் கடந்த 05.07.2024 அன்று அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது... ஆகவே, மாநகராட்சியின் இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த போராட்டகார்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். பாதுகாப்பு பணிக்காக 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மேயர் ஜெகன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு  வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை வரவேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.




இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்னை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. ESI, PFபிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது காட்டடப்படும். பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்றார்.


இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப்பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.