தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து வேதாந்த நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்த நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் தவான், ஸ்டெர்லைட் ஆலையை மூடும்போது நாட்டின் 36 சதவீத காப்பர் உற்பத்தியை பூர்த்தி செய்தது. 2014 மற்றும் 18 காலகட்டத்தில் ரூ. 13 ஆயிரத்து 500 கோடி வரி செலுத்தியுள்ளது தினமும் 1200 டன் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையில் வசதிகள் உள்ளன என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீரி, ஐ ஐ டி, மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நிபுணர்கள் மற்றும் பிரபலமான சுற்றுச்சூழல் நிபுணர் அடங்கிய குழுவை அமைத்து ஆராயலாம். அந்த குழு இந்த நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கலாமா என்றும் முந்தைய உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த நிறுவனம் காப்பர் உற்பத்தியுடன் தொடர்புடையது நாட்டின் பொருளாதாரத்துடன் பங்களிப்பது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், முதலில் தமிழக அரசு தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே எந்த முடிவுக்கும் வர வேண்டும். ஏற்கனவே பல விதிமுறை மீறல்களை இந்த ஆலை செய்துள்ளது. ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் கூட விதிக்கப்பட்டது. இந்த ஆலையை பொறுத்தவரை எந்த உத்தரவையும் மதிப்பதில்லை, அமல்படுத்துவதில்லை எனவே இந்த விவகாரத்தில் முழுமையான வாதம் கேட்ட பின்னரே நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றார். மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த விவகாரம் சுற்றுசூழல், உடல்நலம் உள்ளிட்டவை சம்பந்தப்பட்டது. எனவே இந்த விவகாரத்தை பொருளாதார நோக்கில் பார்க்கக்கூடாது சில விசயங்கள் பணத்தால் பெற முடியாது என்றார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், இந்த ஆலையை ஆய்வு செய்ய குழுவை அமைக்கலாம். அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கலாம். மேலும் தமிழக அரசின் எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் புறம் தள்ளிவிட முடியாது என்று அவர்கள், அதே நேரம் நாட்டுக்கு தாமிரம் தேவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. எனவே வேதாந்தா நிறுவனம் தனது தரப்பு வாதத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் சிறு குறிப்பாக தாக்கல் செய்யலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை இன்று தள்ளி வைத்தனர்.