தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் அற்புதராஜ். இவருடைய மகன் செல்வசதீஷ் என்ற சூபி(வயது 24). இவர் நண்பரை கொலை செய்த வழக்கில் கடந்த 09.05.2022 முதல் ஜெயிலில் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தென்பாகம் போலீசில் குற்றவாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். நண்பரை கொலை செய்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி பேரூரணி சிறையில் இருந்த செல்வசதீஷ் என்ற சூபியை ஆயுதப்படை ஒரு பெண் காவலர், 2 பயிற்சி காவலர்கள் உள்பட 5 பேர் தூத்துக்குடி நீதிமன்றத்திற்க்கு அழைத்து வந்தனர். அவர்கள் சுமார் 11.30 மணி அளவில் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு நின்ற போது, செல்வசதீஷ் என்ற சூபி திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினாராம். இதனால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல போலீசார் அனுமதித்து உள்ளனர். அப்போது கழிவறை ஜன்னலை உடைத்து செல்வசதீஷ் என்ற சூபி தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஆயுதப்படை காவலர் ஒருவரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தப்பிஓடிய கைதியை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விசாரணையில், நீதிமன்ற வளாத்தில் இருந்து தப்பிய செல்வசதீஷ் ஏற்கனவே திட்டமிட்டு, அந்த கழிவறை வழியாக தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. அவர் ஏற்கனவே தயாராக காரில் காத்து இருந்த தனது மனைவியுடன் வெளியூருக்கு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் செல்வசதீஷ் என்ற சூபியின் செல்போன் சிக்னல் மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் அவர் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பஸ்சில் தனது மனைவியுடன் அமர்ந்து இருந்த செல்வசதீஷ் என்ற சூபியை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். செல்வ சதீஷை கைது செய்து தூத்துக்குடி கொண்டு வந்தனர். பின்பு அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் ப்படுத்தி மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.