தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவல்லானில் பொதிகை மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் மதிப்பு கூட்டிய மண்பானை மற்றும் கலைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் பொதிகை மகளிர் குழுவில் 18 பெண்கள் உள்ளனர். பட்டம் பயின்ற சுபலட்சுமி மண்பானையில் கலைநயம் மிக்க ஓவியங்கள் மற்றும் வண்ணங்களை தீட்டுவது குறித்து மகளிர் குழுவினருக்கு பயிற்சி அளித்ததுடன் தானும் அக்குழுவில் ஒரு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். பல வண்ணங்களில் இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொங்கல் பானைகளை தயாரித்து தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கும் சிலர் வாங்கி சென்றுள்ளனர்.
இந்த ஆண்டும் வங்கி கடன் மற்றும் குழு உறுப்பினர்களின் சொந்த பணத்தில் ரூபாய் 8 லட்சம் வரை முதலீடு செய்து பொங்கல் பானை தயாரிப்பு பணிகளை உற்சாகமாக துவக்கினர். பானை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த 17ஆம் பதினெட்டாம் தேதியில் பெய்த அதிக கன மழை காரணமாக மண்பானைகள் அனைத்தையும் வாரிசுருட்டி சென்று விட்டது. பொங்கலுக்காக தயாரித்து வைத்திருந்த சுமார் 10,000 மண்பானைகள் 9,500 அடுப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ளத்தால் அனைத்தையும் இழந்த மகளிர் குழுவினர் இழப்பிலிருந்து மீண்டும் வர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.மிச்சமிருந்த பொருட்களைக் கொண்டு கடந்த சில நாட்களாக பானை தயாரிப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் தற்போது வரை 500 பானைகள் மட்டுமே தயார் செய்து உள்ளனர்.
இதுகுறித்து பொதிகை மகளிர் குழுவினர் கூறும்போது, “பொங்கல் வைப்பதற்காக மண்பானைகளை தயாரித்து அதில் கலை நியமிக்க ஓவியங்கள் மற்றும் வண்ணங்களை திட்டி விற்பனை செய்து வருகிறோம். மக்கள் மத்தியில் இந்த பணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஆண்டும் வழக்கம்போல் நாங்கள் தயார் செய்து வைத்திருந்த மண்பானைகளையும் அடுப்புகளையும் சுடுவதற்காக வைத்து இருந்தோம் எல்லாத்தையும் வெள்ளம் அடித்து சென்று விட்டது. இதனால் எங்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதில் இருந்து மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் மண்பானை தொழிலை துவங்கியிருக்கிறோம். பொங்கல் பானை கேட்டு வந்த பல ஆர்டர்களை ரத்து செய்து விட்டாலும் கூட தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டுமே தயாரித்துக் கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். இதுவரை 500 பானைகளை மட்டுமே தயாரித்துள்ளதாக கூறும், இவர் உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதால் கூடுதலாக 1500 மண்பானைகள் வரை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.மழை வெள்ளத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் விலையை உயர்த்தவில்லை வாடிக்கையாளர்களிடம் ஏற்கனவே கூறிய விலையை தான் வாங்குகிறோம். எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உதவி செய்ய வேண்டும் மகளிர் குழு மூலம் மாவட்ட தொழில் மையத்தில் மனு கொடுத்துள்ளோம். மானியத்துடன் கடன் பெறுவதாக உறுதியளித்துள்ளனர் என தெரிவிக்கும் இவர் கடன் உதவி கிடைத்தால் மட்டுமே நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும்” என்கின்றனர்.