தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வெளித்துறைமுக வளர்ச்சி திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முத்தையாபுரம் பகுதியில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், தொழில் சங்கங்களை சார்ந்தவர்கள், பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தில் பேசியவர்கள் இந்தத் திட்டத்தால் நாட்டினுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடையும், வரும் 2030 ஆம் ஆண்டு கடல் சார் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த தூத்துக்குடி வெளித்துறைமுக வளர்ச்சி திட்டம் மிகவும் பயன்படும். எனவே இந்த திட்டத்தை கால தாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் மீனவர்களின் பாதுகாப்பில் எந்தவித இடையூறும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
நான்கு சரக்கு பெட்டக தளங்கள்
தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் ஜெயந்த் கூறுகையில், இந்த திட்டம் வரும்போது தூத்துக்குடி துறைமுகத்தில் மேலும் நான்கு சரக்கு பெட்டக தளங்கள் வரும். இதன் மூலமாக கூடுதலாக நான்கு லட்சம் சரக்கு பெட்டங்களை கையாள முடியும், அனைத்து பிரிவுகளிலும் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும், தூத்துக்குடி பகுதியில் அதிகமான உற்பத்தி நிறுவனங்கள் வரும் என்றார்.
தூத்துக்குடி மாவட்ட சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவன சங்கத்தை சார்ந்த லியோ கூறும் போது, தூத்துக்குடியில் துறைமுகம் வந்த பின்பு தான் எரமன தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன. விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றால் பல தொழிற்சாலைகள் வந்துள்ளது என்பதற்கு அடித்தளம் துறைமுகம் தான். எனவே துறைமுகம் விரிவாக்கம் செய்யும்போது மேலும் பல தொழில்கள் வளரும் தூத்துக்குடி மாவட்ட வளரும் தமிழக வளரும் ஏன் இந்தியா நாடே வளரும் என்றார்.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம்
அதேநேரத்தில் தூத்துக்குடி வெளித்துறைமுகம் அமைப்பது குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதுகுறித்து சமூக ஆர்வலரான கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் அமைய உள்ள வெளித்துறைமுகத்தால் கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் CRZ zone 5ல் வரக்கூடிய பகுதி என்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கான உயிர் சூழல் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும்போது கடல் ஆழப்படுத்தப்படும் இதனால் பவளப்பாறைகள் அழியக்கூடிய சூழல் ஏற்படும் என்கிறார். மேலும் வெளித்துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கப்படுமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்கிறார். உள்ளூர் மீனவர்களுக்கு உரிய தகவல் அளிக்காமல் ஒளிவு மறைவுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன கேள்வி எழுப்பும் இவர்,இது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்.வளர்ச்சி என்பது பெரும் முதலாளிகளிகளுக்கான வளர்ச்சியாகவே உள்ளது என்றார்.