ஐம்பது மீட்டர் அகலமுள்ள ஓடையில் ஐந்து மீட்டர் அளவு பாலம் கட்டிய நெடுஞ்சாலை துறை, ஈராண்டுக்குள் அந்தரத்தில் தொங்கும் பாலம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் புதுப்பட்டி - அச்சங்குளம் சாலை சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் உள்ள இச்சாலையின் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேலக்கரந்தை, வெளவால் தொத்தி கிராம பாசன கண்மாயின் மறுகால் தண்ணீர் செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் அகலமுடைய ஓடை உள்ளது. இவ்வோடையில் மழை காலத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்யக்கூடிய மழைநீர் இவ்வோடை வழியாக ஆற்றங்கரை பாசன கண்மாய்க்கு சென்றடைகிறது. தவிர தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் விபத்து மற்றும் அவசர கால வழியாகவும் தாப்பாத்தி - அச்சங்குளம் - புதுப்பட்டி - சாலை உள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து வாகனங்கள் சராசரியாக சென்று கொண்டிருக்கும். புதுப்பட்டி - அச்சங்குளம் சாலையில் உள்ள இவ்வோடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மழைக்காலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயத்தில் தரைப்பாலம் வழியாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் வெளவால் தொத்தி - கீழக்கரந்தை - மேலக்கரந்தை - வடமலாபுரம் வழியாக அச்சங்குளத்திற்கு சுமார் 15 கிமீ சுற்றி வர வேண்டிய நிலை இருந்து வந்தது. தவிர கால்நடைகள், உழவு டிராக்டர்கள் விவசாய பணிக்கும் செல்ல முடியவில்லை. மழைக்காலத்தில் தீவு போல கிராமங்கள் ஆண்டு தோறும் துண்டிக்கப்பட்டது. இதனால் இச்சுற்றுவட்டார அச்சங்குளம், வேடப்பட்டி, சொக்கலிங்கபுரம், , புதுப்பட்டி கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனை கருத்தில் கொண்டு தரைப்பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு 50 மீட்டர் அகலமுள்ள இந்த ஓடையில் புதிய உயர்மட்ட பாலம கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐம்பது மீட்டர் அகலமுள்ள ஓடையில் குறுகலான ஐந்து மீட்டர் அகலத்தில் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு இரண்டு வருடத்திற்குள் கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்குகிறது. எந்ரேமும் இப்பாலம் வழியாக பயணிப்போரை உயிர் பலி வாங்க காத்திருக்கிறது இந்த பாலம்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த பெருமழைக்கு பாலத்தின் இருபுறமும் சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டன. பெயரளவில் ஒட்டுப் போட்டுள்ளனர். இப்பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பாலம் மீது செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மாற்றப்பாதை அமைத்து போர்க்கால அடிப்படையில் ஓடையின் அகலத்திற்கேற்றவாறு அகலமான தரமான பாலம் கட்ட வேண்டும்” என்றார்.