பிளாஸ்டிக் லைட்டர்களால் 5 லட்சம் தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் போல தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில்தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக 90 சதவீதம் பெண்கள்தான் தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாக என 5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.




தீப்பெட்டி மூலப்பொருளின் விலை உயர்வு, ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை குறைப்பு என பல்வேறு பிரச்சனைகள் இந்த தொழிலுக்கு இருந்த போதிலும் தற்போது தீப்பிடித்து தொழிலே அடியோடு முடக்கிப் போடும் வகையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டர்கள் உருவாகியுள்ளன. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து இந்த லைட்டர்கள் அதிகளவில் இந்தியாவிற்கு கொண்டுவந்து பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.




இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் சீனாவில் இருந்து நோபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால், தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் லைட்டர்களை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் பத்து நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் லைட்டர்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.






இதனால் உற்பத்தி செய்து வைத்த தீப்பெட்டி பண்டல்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர். வாரத்தில் ஆறு நாட்கள் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது நான்கு நாட்கள் மட்டுமே தீப்பெட்டி உற்பத்தி செய்யும் முடிவுக்கு உற்பத்தியாளர்கள் வந்துள்ளனர். அதுமட்டுமின்றி தினந்தோறும் பகுதி மற்றும் முழு இயந்திர தீப்பெட்டியில் இரண்டு ஷிப்ட் நடந்து வந்தது. தற்போது ஒரு ஷிப்டாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் பல்வேறு தீப்பெட்டி ஆலைகள் மூடக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகும். வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை ஒரு ஷிப்ட் தான் என்பதால் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், “பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை அதிகரித்து வருவதால் தீப்பெட்டி தொழில் அடியோடு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து தீப்பெட்டிக்கான ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதனால் தீப்பெட்டி உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நடைபெற்ற நிலையில் தற்போது நான்கு நாட்கள் மட்டுமே வேலை நடைபெற தொடங்கியுள்ளது. மேலும் இரண்டு சிப்ட் தினமும் வேலை நடைபெற்றது. அதனை ஒரு சிப்டாக குறைத்துள்ளோம். நாளொன்றுக்கு ஒரு லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை மட்டுமே தீப்பெட்டி உற்பத்தியை செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் லைட்டர்களை முற்றிலுமாக தடை செய்தால் மட்டுமே தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும்” என்றார்