தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் இடையே தாம்போதியில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலை வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டதால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.




எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையில் பாசனக் கண்மாய் உள்ளது இந்தக் கண்மாய்க்கு மாவில் பெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் வந்து சேர்கிறது. மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுக்கால் பாயும் தண்ணீர் ஓடை வழியாக ஆற்றங்கரைக் கண்மாய் சென்றடைகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதன் காரணமாக மறுகால் ஓடை செல்லும் கீழக்கரந்தை அயன் வடாமலாபுரம் சாலை துண்டிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த சாலையில் உள்ள தாம்போதி பாலத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க பணிகள் தொடங்கிய நிலையில் மழை காரணமாக ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் அந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலப்பணிக்காக அருகில் அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையை மூழ்கடித்து மழைநீர் சென்றது. இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தற்காலிக சாலை முழுவதுமே அடித்து செல்லப்பட்டது அதன் இணைப்புப் பகுதியில் தார் முழுவதும் துண்டு துண்டாக கிடக்கும் நிலை உள்ளது. இதனால் கடந்த இரண்டரை மாத காலமாக கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அயன் வடமலாபுரம் வருவதற்கும் மேலக்கரந்தை தாப்பாத்தி வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து அயன் வடமலாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வரதராஜன் கூறும் போது, “ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மேலக்கரந்தை கண்மை நிரம்பி மறுகால் பாயும் போது அதன் தண்ணீர் கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் சாலையில் உள்ள தாம்போதி வழியாக செல்லும் இதனால் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்து இருந்தோம். எங்கள் ஊரின் கோரிக்கையை ஏற்று உயர் மற்றும் பாலம் கட்டும் பணி தொடங்கியது இதற்காக தாம்போதியில் பெரிய அளவில் குழாய்கள் அமைத்து மாற்று பாதையும் அமைக்கப்பட்டது. கடந்த நவம்பரில் பெய்த மழை மேலக்கரந்தை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து. கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் சாலை துண்டிக்கப்பட்டது. மாற்றுப் பாதையையும் மழை நீர் மூழ்கடித்து சென்றதால் விவசாய நிலங்களுக்கு உரங்கள் விதைகள் மற்றும் விவசாய பணிகளுக்காக தொழிலாளர்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி அயன் வடமலாபுரத்துக்கு அழைத்து சென்றோம்.




இந்நிலையில் கடந்த மாதம் பெய்த அதிக கன மழையில் மேலக்கரந்தை மறுகாலில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கீழக்கரந்தை அயன் வடமலாபுரம் இடையே உள்ள தாம்போதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதையும் அடித்து செல்லப்பட்டது. மேலும் தாம்போதியை இணைக்கும் தார்சாலையும் பெயர்ந்து கிடப்பதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றியே சென்று வருகிறோம். எனவே மழைக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உயர்மட்ட பாலப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் தற்காலிக பாதையையும் அமைத்து தர வேண்டும்” என்றார்.