கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் போலியான வருமான வரித்துறை ஆவணங்களை வழங்கி ரூ.1.5 கோடி அளவில் தங்களது வருமான வரி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் (நாடார் மேல்நிலைப் பள்ளி) 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் அளித்த ஆவணங்களை பார்வையிட்ட வங்கி நிர்வாகம் நீங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி செலுத்தவில்லை. நீங்கள் கொடுத்துள்ள வருமான வரித்துறை ஆவணம் போலியானது. உங்களுக்கு கடன் தர இயலாது என கைவிரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை தனக்குத் தெரிந்த ஆடிட்டர் ஒருவரிடம் தனது வருமான வரி ஆவணங்களை கொடுத்துள்ளார். ஆசிரியை கொடுத்த வருமான வரித்துறை ஆவணமும், வங்கி செல்லானும் போலியானவை என ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் பள்ளியில் சக ஆசிரியர்களிடம் பரவியது. தொடர்ந்து அப்பள்ளியை சேர்ந்த 17 ஆசிரியர்கள், வருமான வரி கட்டியது தொடர்பான ஆவணம் மற்றும் வங்கி செல்லான்களை சரி பார்த்தபோது அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆக.8-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் கொடுத்த வங்கி செல்லானின் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ள மாவட்ட கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின்படி கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கிக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது, அந்த செல்லான் மோசடியாக தயார் செய்யப்பட்டது. அது வங்கியின் மூலம் வழங்கப்படவில்லை. தற்போது இ- செல்லான் தான் நடைமுறையில் இருப்பதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் 17 பேர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 10-ம் தேதி தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரில், ஆசிரியர்களின் வருமான வரிக்கு கொடுத்த பணத்தை செலுத்தாமல் போலியான வங்கி செல்லான் மூலம் கட்டியதாகவும், ஆசிரியர்களுக்கு போலியான வருமான வரித்துறை ஆவணத்தை கொடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக தலைமையாசிரியர் ஜான் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ரூ.1.50 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆக.10-ம் தேதி இரவே பள்ளி தலைமையாசிரியர் ஜான் கணேஷ் ஆன்லைன் மூலமாக காவல்துறையில் ஒரு புகாரை பதிவு செய்துள்ளார். அவரது புகாரில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் வருமான வரி தொடர்பான செல்லான்களில் தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்குவது வழக்கம். அந்த வகையில் சில ஆசிரியர்கள் என்னிடம் கையெழுத்து வாங்கி அவர்களாக நேரடியாக வருமான வரி செலுத்தி வருகின்றனர். சில ஆசிரியர்கள் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் தங்க மாரியப்பன் என்பவர் மூலமாக வருமான வரி தொடர்பான செல்லான்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்து வருகின்றனர். நானும் தங்கமாரியப்பன் என்பவர் மூலமாக என்னுடைய வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்து வந்துள்ளேன்.
இந்நிலையில் ஆசிரியர்களின் வருமான வரி பணத்தை பெற்றுக் கொண்டு நான் ஏமாற்றி விட்டதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் எந்த ஆசிரியரிடமும் எந்தவிதமான தொகையும் பெற்றது கிடையாது. நானும் தங்கமாரியப்பன் என்பவரால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி செலுத்தவில்லையென்றால், அது அபராதத் தொகையுடன் திரும்ப செலுத்த வேண்டிய நிலை வரும். இதனால் அந்த பள்ளி ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்களிடமும், தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.