தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - குஜராத்தில் இருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பு

பெருமழையால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உப்பு விலை ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது உப்பு தன் ஒன்றுக்கு ரூ. 4000 முதல் 4500 வரை விற்கப்படுகிறது

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரையிலான கடற்கரை சார்ந்த பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு தொழில் நடைப்பெற்று வருகிறது இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் துவங்கும் பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி படிப்படியாக தொடக்கும் ஏப்ரல் முதல் செப்டம்பர் 6 மாத காலம் உப்பு உற்பத்திக்கு ஏற்ற காலமாக உள்ளது அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கியதும் உப்பு உற்பத்தி முடிவுக்கு வரும.

Continues below advertisement


உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்துதல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு  லாரிகளில் ஏற்றுதல்,  உப்பு பண்டல் கட்டுதல், உப்பு  பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் சுமார் 40 கிலோ எடையுள்ள உப்பு  கூடையுடன் தலையில் சுமந்து உப்பு  அம்பாரம் செய்வது மிகவும் கடும் பணியாக உள்ளது.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த அதிக கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களை உருக்குலைத்து உள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ 100 கோடி மதிப்பிலான 6 இலட்சம் டன் உப்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலந்தது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்களை சீரமைத்து அடுத்த சீசன் உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை துவங்கி உள்ளனர்.உப்பளங்களில் குவிந்துள்ள மண் குவியல்களை அகற்றுதல், சமன்படுத்துதல்,கரைகளை சீரமைத்தல், ஆழ்துளை கிணறுகளை சரி செய்தல், மின் இணைப்புகளை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். சேதம் மிக அதிகம் என்பதால் சீரமைப்பு பணிகளுக்கு பல மடங்கு செலவாகும் என கூறும் உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி மூன்று மாதங்கள் வரை தாமதமாகும் என்கின்றனர்.


இதுகுறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, “வழக்கமாக மழைக்காலம் நிறைவடைந்ததும் உப்பளங்களை சீரமைக்க ஏக்கருக்கு ரூ 25,000 முறை செலவாகும் தற்போது அது கிட்டத்தட்ட 4 மடங்கு 5 மடங்கு உயர்ந்து 2 லட்சம் வரை செலவாகும் நிலை உள்ளது. மழைநீர் அதிகமாக தேங்கியதால் ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரின் உப்பு அடர்த்தி குறைவாக இருக்கும், எனவே தரமான உப்பு உற்பத்திக்கு தேவையான அடர்த்தி வருவதற்கு ஓரிரு மாதங்கள் வரை ஆகலாம். உப்பளங்களில் சீரமைப்பு பணிகளை முடித்து முழுமையான உற்பத்தி மே மாதம் தான் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக கூறும் இவர்கள், இதனால் இந்த ஆண்டு 50 சதவீத அளவுக்கு உப்பு உற்பத்தி இருக்கும் என்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது 4 லட்சம் டன் அளவுக்குத்தான் உப்பு கையிருப்பில் உள்ளது. வரும் மார்ச் மாதம் வரை மட்டுமே இது போதுமானதாக இருக்கும், அதற்குள் ஆங்காங்கே சிறிய அளவிலாவது உப்பு உற்பத்தியை துவங்கினால் நிலைமையை சமாளிக்கலாம் இல்லையெனில் வெளி மாநிலத்திலிருந்து உப்பு வாங்க வேண்டிய நிலை வரும்” என்கிறார்.


தூத்துக்குடியில் மழைக்கு முன்பு ஒரு டன் உப்பு 3000 முதல் 3500 வரை விற்கப்பட்டது. பெருமழையால் உப்பளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து உப்பு விலை ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தற்போது உப்பு தன் ஒன்றுக்கு ரூ. 4000 முதல் 4500 வரை விற்கப்படுகிறது.

Continues below advertisement