திருச்செந்தூர் அருகே சிறுநாடார் குடியிருப்பு ஆர்.எம். வீ நடுநிலைப்பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் விடாமல் வெளியே நிறுத்தியதால் சுமார் 2 மணி நேரம் வெயிலில் காத்து நின்றதால் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு அரசு உதவி பெறும் ஆர்.எம்.வீ நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 110 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக பர்வதாதேவி(49). என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
பள்ளி தாளாளர் ராஜன் என்பவர் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வளாகத்தில் இருக்கக்கூடிய 12 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்து வந்துள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தலைமை ஆசிரியர் பர்வதா தேவி புகார் அளித்துள்ளார். இதனால் தாளாளர் ராஜன் தலைமையாசிரியரை அவதூறாக வாட்ஸ் அப்பில் பரப்பியும், ரூ.30 லட்சம் பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பாதுகாப்பு கேட்டு தலைமையாசிரியர் பர்வதாதேவி குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தாளாளர் ராஜன் பள்ளி மாணவர்களை பின் பாதை வழியாக வரவைத்து தலைமை ஆசிரியரை வெளியே நிறுத்தி பள்ளிக்கு வெளியில் கிரில் கேட்டிற்கு பூட்டு போட்டு சென்றுள்ளார். இதனால் தலைமையாசிரியர் சுமார் இரண்டு மணி நேரமாக வெளியிலே காத்திருந்தார். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.
இந்த ஆண்டின் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் பணத்திற்காக பணி செய்ய விடாமல் வெளியே நிறுத்திய சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது