தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரு உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் ஜியா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது, யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சிசிடிவி கேமராவில் கொலையாளிகளின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்ததால் அப்பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் இதில் வெள்ளத்துரை, சாமி ஆகியோரை வெட்டிக் கொலை செய்தது கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 3வது தெருவைச்சேர்ந்த காளிமுத்து மகன் சேர்மக்கனி (32), மந்தித்தோப்பு பால்சாமி மகன் மாரிராஜ் (32), இனாம்மணியாச்சி தங்கப்பாண்டி மகன் கார்த்திக் (32) என்பதும், அவர்கள் மதுரைக்கு அரசு பஸ்சில் தப்பிச் செல்வதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லிதேவ்ஆனந்த் தலைமையில் எஸ்ஐக்கள் செந்தில்குமார், மணிமாறன், ஏட்டுகள் சுரேஷ், செல்லத்துரை ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க ஜீப்பில் மதுரை சென்றனர். இதற்கிடையில் சேர்மக்கனி உள்ளிட்ட 3 பேரும் மதுரையில் இருந்து மீண்டும் அரசு பஸ்சில் ராஜபாளையம் நோக்கி வருவது தெரிய வந்தது. இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பஸ்சை மடக்கி பிடித்த தனிப்படை போலீசார், சேர்மக்கனி உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, மேற்கு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தொழில் போட்டியில் வெள்ளத்துரையையும், சாமியையும் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
கைதான கார்த்திக், வெள்ளத்துரையின் கடையில் இருந்து நான்கு கடைகள் தள்ளி மீன் கடை மற்றும் மட்டன் கடை வைத்துள்ளார். அவரது கடையில் வியாபாரம் சுமாராக நடந்துள்ளது. ஆனால் வெள்ளத்துரையின் கடையில் வியாபாரம் படுஜோராக நடந்துள்ளது. இதன் காரணமாகவே கார்த்திக் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்த சேர்மக்கனி, மாரிராஜ் ஆகியோர் சேர்ந்து வெள்ளத்துரையையும், சாமியையும் வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொழில் போட்டியில் மீன் வியாபாரி உள்ளிட்ட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.