தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார். அதன்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 775 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூ.15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார். மேலும் இதுவரை ரூ.94,50,000/- மதிப்புள்ள 875 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசாரை பாராட்டினார். மேலும் ஆன்லைன் மூலம் மூன்று பேரிடம் மோசடி செய்யப்பட்டு சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட ரூ 13 இலட்சத்து 36 ஆயிரத்து 530 ரூபாயை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.




இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, "தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை காணாமல் போன ரூம் 94.50 லட்சம் மதிப்பிலான 875 செல்போன்கள் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வசதி தொடர்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடந்த ஓராண்டில் மட்டும் 46.59 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.19.62 கோடி பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற அவர் நீதிமன்றங்கள் மூலம் உரிய உத்தரவுகள் பெறப்பட்டு இந்த பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.




தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மொத்தம் 68 கொலைகள் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை விட 10 கொலை சம்பவங்கள் குறைவாக உள்ளது. இதே போல் 2023 மொத்தம் 578 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 70% வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.3.87 கோடி மதிப்பிலான பணம் பொருட்கள் வைக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு 127 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 239 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து ரூ 1.53 கோடி மதிப்பிலான 1535 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 155 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.