தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தால் SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்ற வாக்கு மைய நிலை அலுவலர்கள், விண்ணப்ப படிவங்களை வழங்கினர். அந்த விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து திருப்பி வழங்குவதற்கான கால அவகாசம், டிசம்பர் 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டுட்டிருந்தது. பின்னர், கால அவகாசம் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 14-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Continues below advertisement

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் க.இளம்பகவத், வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது,

Continues below advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் 27.10.2025 அன்று நடப்பில் இருந்த வாக்காளர் பட்டியலின் படி 6 சட்டபேரவை தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 7,27,512 பேர், பெண்கள் 7,62,939 பேர், இதரர் 234 பேர் என மொத்தம் 14,90,685 வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம் பணியின் போது ஆண்கள் 78,288 பேர், பெண்கள் 84,187 பேர், இதரர் 52 பேர் என மொத்தம் 1,62,527 பேர் இடமாற்றம், கடண்டறிய இயலாமை, இறப்பு, இரட்டை பதிவு, கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப சமர்ப்பிக்காமை ஆகிய காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், இறந்தவர்கள் 57,192 பேர், நிரந்தர குடிபெயர்வு பெற்றவர்கள் 58,889 பேர், இல்லாதவர்கள் 39,723 பேர், இதர காரணங்களில் 104 பேர், இரட்டை பதிவு 6,619 பேர் ஆவர்.

வரைவு வாக்காளர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத நபர்களின் பெயர் விவரம் வாக்குச்சாவடிகள் வாரியாக ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.

இந்த பட்டியல் தொடர்பாக உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை டிசம்பர் 19 முதல் வரும் 18.01.2026 வரை அளிக்கலாம். மேலும், 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு தகுதி பெற்ற வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த மனுக்கள் பெறப்படும். தேர்தல் ஆணைய இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.பிரியங்கா, கோட்டாட்சியர் பிரபு, தேர்தல் வட்டாட்சியர் தில்லைபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்படி தொகுதி வாரியாக மொத்த வாக்காளர் விவரம்:

விளாத்திகுளம்: 1,97,947.

தூத்துக்குடி: 2,36,461.

திருச்செந்தூர்: 2,22,631.

ஸ்ரீவைகுண்டம்: மொத்தம் 2,07,054

ஓட்டப்பிடாரம்: 2,32,536

கோவில்பட்டி: 2,31,529

மொத்தம் : 13,28,158