தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு புதுப்பொலிவுடன் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு நோய்களுக்கான அனைத்து அதிநவீன சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகின்றன.




தூத்துக்குடி அரசு  மருத்துவமனை:


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு கடந்த 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 18,19 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவு கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.


இந்நிலையில் கண் சிகிச்சை பிரிவு தலைவராக புதிதாக பொறுப்பேற்ற டாக்டர் ரீட்டா ஹெப்சி ராணி கண் சிகிச்சை பிரிவை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் சிவக்குமார் ஏற்பாட்டில் கண் சிகிச்சை பிரிவு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண் சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது.




தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் சிவக்குமார் புதுப்பிக்கப்பட்ட கண் சிகிச்சை பிரிவை திறந்து வைத்து பேசும்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில் கண் நோய் தொடர்பான அனைத்து மதினவின சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இந்தத் துறையில் புதிய மருத்துவக் குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர். அவர்கள் இந்த துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள வசதிகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.




இதனைத் தொடர்ந்து கண் சிகிச்சை பிரிவின் துறை தலைவர் கூறும் போது,  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவுக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். தினமும் 20-க்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தெரிவித்த அவர், இங்கு 50 பேர் வரை தங்கி சிகிச்சை பெரும் வசதி உள்ளது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இங்கு நவீன கண் புரை அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, கண் பட்டை இறங்கி இருப்பதை சரி செய்தல், கண் இமை சீரமைத்தல், கண்ணீர் அழுத்த அறுவை சிகிச்சை, சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் லேசர் சிகிச்சை, மற்றும் கண்ணுக்குள் ஏற்படும் ரத்தக் கசிவை சரி செய்ய நவீன மருந்து செலுத்தும் முறை, பிறவியிலேயே கண்ணில் பூ விழுந்தது மற்றும் கருவிழி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவர்களுக்கு அழகிகளுக்காக செயற்கை கண் பொருத்தும் சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான கண் நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கும் வசதியும் இங்கு உள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால் பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் அனைத்து சிகிச்சைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது என்றார்.


நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, கண் சிகிச்சை பிரிவு முன்னாள் தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்