தூத்துக்குடியில் உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக் என்ற உணவுச் செர்மத்தினை மீதான பழைய உணவு எண்ணெயை தூய்மைப்படுத்த பயன்படுத்தியதால் கேஎஃப்சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தை இடைக்கால ரத்து செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் ஹோட்டல் மற்றும் சாலை ஓரங்களில் செயல்படும் பானிபூரி உள்ளிட்ட கடைகளில் பழைய கெட்டுப்போன உணவுகளை பயன்படுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, தூத்துக்குடியில் உள்ள கேஎஃப்சி என்ற உணவகத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக் என்ற உணவுச் செர்மத்தினை மீதான பழைய உணவு எண்ணெயை தூய்மைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. எனவே 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் முன்தயாரிப்பு செய்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய பொது சுகாதாரத்திற்கு கேடு விளைக்கும் வகையில் பழைய பொருட்களை பயன்படுத்திய கேஎஃப்சி உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சின்னத்துரை ஜவுளி கடை வளாகம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள பானி பூரி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பானிபூரி கடையில் செயற்கை நிறமிகள் ஏதும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பானிபூரி மசாலா உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.